சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டு முதல்வர் ஷீலா தீட்சித் பாராட்டினார்.
தில்லி தல்கடோரா மைதானத்தில் இரு நாள் வருடாந்திர சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பல்வேறு பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்விளக்க அரங்குகளைப் பார்வையிட்டார்.
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பூசா பள்ளியின் சார்பில் 15 மாணவர்கள் அமைத்திருந்த அரங்குக்குச் சென்ற முதல்வர், கழிவுப் பொருள்கள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை பார்வையிட்டார்.
அதில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயல்முறைகளை மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களது முயற்சிக்கு ஷீலா தீட்சித் பாராட்டு தெரிவித்தார்.
தேவையற்ற பொருள்களில் இருந்து காளான் செய்யும் முறையை பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினர். பள்ளியில் உற்பத்தி செய்யப்பட்ட பலவித காளான்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.
மூலிகைப் பயன்கள் பற்றியும், தரிசு நிலங்களை பசுமைப்படுத்துதல், பழைய காகிதங்ளை மறுசுழற்சி முறை மூலம் பயனுள்ள அட்டைகள் தயாரித்தல் ஆகியவை குறித்தும் விளக்கினர்.
குப்பைகளாக வீசப்படும் பொருள்களில் இருந்து சமையலறை உடைகள், வண்ண கைபேசி உறைகள், பரிசுப் பொருள்களை பேக் செய்யும் உறைகள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர். கண்ணாடித் துண்டுகள், காகிதங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் ஆகியவற்றையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய ஷீலா தீட்சித், ""தலைநகரை பசுமை நகரமாக உருவாக்குவதில் பள்ளிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றங்களின் பங்களிப்பு பாராட்டுகுரியது.
இம்மன்றங்களின் உதவியுடன் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது மேலும் தொடர வேண்டும்' என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக