Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 22 டிசம்பர், 2012

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புக்கு சிறுபான்மை மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிதொகை புதுப்பித்தல் ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுதி செய்ய வேண்டும்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் கடந்த ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் கல்லூரி முதல்வர் அல்லது டீனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்ப படிவங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின் அல்லது டீனின் கையொப்பத்துடன் சிறுபான்மை நல ஆணையர் முகவரிக்கு ஜனவரி மாதம் 10–ந்தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாணவ–மாணவிகளின் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியில் இருந்து 10.1.2013–க்குள் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

பிஜேபி கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: ரூ.846 கோடி இழப்பு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.846½ கோடி இழப்பு:
பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மறைந்த பிரமோத் மகாஜன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து இருப்பதும், அதன் மூலம் மத்திய அரசுக்கு 846 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்:
இதையொட்டி, தனது விசாரணையை முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பார்தி ஏர்டெல், வோடபோன், ஹட்சிசன் மேக்ஸ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மந்திரி விடுவிப்பு:
முதல் தகவல் அறிக்கையில், தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை இயக்குனர் ஜெனரலும், பி.எஸ்.என்.எல். இயக்குனருமான ஜே.ஆர்.குப்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், நேற்றைய குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றவாளி பெயரில் இருந்து நீக்கப்பட்டு, சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளது. இவருடன் மேலும் 72 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மறைந்த தொலை தொடர்புத்துறை மந்திரி பிரமோத் மகாஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:–

அவசரம், அவசரமாக ஒதுக்கீடு:
பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில், தொலை தொடர்புத்துறை, ஆதார அலைக்கற்றை ஒதுக்கீட்டை 3 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் 4.4 மெகா ஹெட்ஸ்–ல் இருந்து 6.2 மெகா ஹெட்ஸ் ஆக உயர்த்தியது. மேலும், அவரது காலத்தில் பயனீட்டாளர்களின் அடிப்படையில் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அப்போதையை தொலை தொடர்புக் கொள்கைக்கு முரணாகவும், அவசரம் அவசரமாகவும் அந்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பிரமோத் மகாஜன் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

இழப்பீடு ஏன்?:
தொலை தொடர்பு கமிஷன் முன்னாள் தலைவரும், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஷ், மறைந்த பிரமோத் மகாஜனுடன் சேர்ந்து சதி செய்தும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், முறைகேடாகவும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு விசாரணையை அடுத்த (ஜனவரி) மாதம் 14–ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஓ.பி.சைனி, அன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தியாவில் முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் 260 மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் பதிவு


டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி வருகின்றனர்.  பெண்கள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 வருடங்களில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 260 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என் கூறியுள்ளது.  அவர்களில், 72 பேர் சுயேச்சைகள். மேலும், 26 காங்கிரஸ் கட்சியினரும், 24 பா.ஜனதாவினரும், 16 சமாஜ்வாடி கட்சியினரும், 18 பகுஜன் சமாஜ் கட்சியினரும் இதில் அடங்குவர்.

மகாராஷ்டிரா முதல் இடம்:
இந்த பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் 41 பேருடன் முதல் இடம் பெறுகிறது.  அதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 பேரும், மேற்கு வங்காளத்தில் 22 பேரும் இடம் பெறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரியிருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், கற்பழிப்பு குற்ற-ச்சாட்டுகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு அந்தந்த கட்சிகளே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றொரு புறம், தேர்தல் ஆணையமும் கடுமையான முறையில் இது குறித்து ஒழுங்கு முறையினை வகுக்க வேண்டும் என அவர் கூறினார்.