தமிழகத்தில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மூன்று மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் 6ந்தேதி கோவில்பட்டியில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதில் தென்மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்குருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், போர்க்கால அடிப்படையில் நிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியின் அளவை ஆய்வு செய்து நிவாரணத்தொகை மதிப்பீட்டை முடிவு செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
தவிர சொந்த நிலமில்லாத குத்தகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பட்டா இல்லாமல் விஏஓ வழங்கும் சாகுபடி அடங்கல் வைத்து நிவாரணம் வழங்கவும், மத்திய அரசின் சார்பில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கணக்கெடுக்க தனிக்குழு நியமிக்கவும், அதற்கான வேண்டுகோள் தீர்மானத்தை வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரில் இயற்றவும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் இன்ஸ்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய கூட்டுறவு கடன்கள், நாட்டுடமையாக்கப்பட்ட பாங்க் கடன்களை ரத்து செய்யவும், விவசாய குடும்ப அனைத்துதரப்பு மாணவ மாணவிகளின் கல்விக்கடன், கல்விக்கட்டணம் உள்பட அனைத்தையும் இந்தாண்டிற்கு தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வரகனூரைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் விவசாய கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் 6ந்தேதி கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிஸ் முன்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் டாக்டர் சிவசாமி தலைமை வகிப்பதாகவும், உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள், விவசாய கூலிதொழிலாளர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு தமிழக விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.