Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

2வது பசுமை புரட்சி : சோனியாவின் நம்பிக்கை


"நாட்டில், இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது, நம் கனவு. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், இரண்டாவது பசுமை புரட்சியை ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் தொடர்பான, மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், காங்., தலைவரும், தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவருமான, சோனியா பேசியதாவது: கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை, தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டின் விவசாய உற்பத்தியை, பல மடங்கு அதிகரிக்க முடியும். இந்த திட்டத்தை, இதுவரை, முழு அளவில், நாம் பயன்படுத்தவில்லை. இந்த திட்டத்தால், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, விளை நிலங்களை உருவாக்குவது உள்ளிட்ட, பல்வேறு பயன்களை அடைய முடியும். விவசாயத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதன் மூலமும், விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.

நாட்டில், இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது, நம் கனவு. இந்த கனவை நிறைவேற்றுவதற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், முக்கிய பங்கு வகிக்கும். அதிகமான விவசாயிகளை, இந்த திட்டத்தில் ஈடுபட வைப்பதன் மூலம், இந்த இலக்கை, நாம் எட்ட முடியும். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில், பல்வேறு சவால்களும், இடையூறுகளும் உள்ளன. இந்த திட்டத்தின் நிதி, தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், இதில், ஊழல் நடப்பதாகவும், புகார்கள் வருகின்றன. இதற்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், இந்த பிரச்னையை சமாளிக்க முடியும். திட்டத்தின் செயல்பாடுகளை, உரிய கால இடைவெளியில், தணிக்கை செய்ய வேண்டும். திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் பெயர்களை பதிவு செய்த, 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கான கூலி, குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், மக்களுக்கு நேரடியான நிதி வசதி கிடைப்பதோடு, மறைமுகமாகவும், பல நன்மைகள் கிடைக்கும். மக்களுக்கு இடையே நிகழும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்கவும், இந்த திட்டம், பெரிய அளவில் உதவும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில், இந்த திட்டத்தின் கீழ், வங்கி கணக்குகளை, மக்கள் துவங்கினால், நேரடி மானிய திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்த முடியும். மக்களுக்கு பயன் அளிக்கும், இதுபோன்ற பல திட்டங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டப் பட்டியலில், மேலும், 30 பணிகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விவசாயத்தின் மூலமாக, வேலை வாய்ப்பை உருவாக்கும் பணிகள், இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக