நீலகிரியில் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலை, தொழிற்சாலைகள் மூலம் தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்க ஏல மையம் மற்றும் கூட்டுறவு தேயிலை ஏல மையத்தின் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது. பொதுவாக, நீலகிரியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் பனிப்பொழிவால் தேயிலைச் செடிகள் பனியில் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். இந்த பாதிப்பு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
இந்தாண்டு, நீலகிரியில் மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே நிலவும் பனியின் தாக்கம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிந்த நிலையிலும் தொடர்வதால், தேயிலை வர்த்தக வருமானத்தில் அடி விழுந்துள்ளது.
நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 0, 1 டிகிரி வெப்பநிலை நிலவியதால் பல இடங்களில் உறைபனி விழுந்துள்ளது.
இதனால், ஏலத்திற்கு வரும் தேயிலைத் தூள் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஜனவரி முதல் வாரம் நடந்த முதல் ஏலத்தில் 15.78 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 95 சதவீதம் விற்பனையான நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான ஜனவரி இரண்டாம் வாரத்தில் ஏற்பட்ட பதட்டத்தால் ஏலங்களில் தேயிலை தேங்கியது.
இரண்டாவது ஏலத்தில் 19 லட்சமும், 3வது ஏலத்தில் 16.97 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்த நிலையில், இரண்டாம் வாரத்தில் 81 சதவீதமும், மூன்றாம் வாரம் 71 சதவீதமாக குறைந்தது. கடந்த மாத இறுதியில் நடந்த நான்காவது ஏலத்தில் 15.03 லட்சம் கிலோவாக தேயிலை தூள் வரத்து குறைந்தது.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு நகர்புறங்களில் கூட பனியின் தாக்கத்தை அதிகமாக உணர முடிந்தது. பனியால் நீலகிரியில் 812 ஹெக்டர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன; கருகிய தேயிலை தோட்டங்களில் மீண்டும் பசுந்தேயிலை தழைத்து வளர மூன்று மாதங்கள் பிடிக்கும், இதனால் வர்த்தக இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக