உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,
இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.
மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.
நீரிழிவு நோய்க்கான மருந்து
முதலாம் வகை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பதோடு சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொழுப்புச் சத்தை குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% பேர் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% பேர் மாத்திரைகளும் 17% பேர் இரண்டும் உபயோகிக்கிறார்கள். நீரிழிவு நோய் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.
இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, இவர்களுக்கு முன் இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்கப்படும் போது சர்க்கரை அளவு 100,120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.
அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 4.1 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முதல் நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. 2005ம் ஆண்டு மட்டும் 20 வயதுக்கும் மேலானவர்களில் 15 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதய நோய், பக்கவாதம்
நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இதய நோய், பக்கவாதம் வந்தபின் 65% பேர் இறக்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களில் 75% பேருக்கு 130/90க்கு மேல் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருந்து உட்கொள்கிறார்கள்.
20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டுக்கு 24,000 பேர் புதிதாக கண் பார்வை இழப்பதாக சொல்லப்படுகிறது. சிறுநீரக கோளாறு வரவும் நீரிழிவு நோய் முதல் காரணம் ஆகிறது. ஆண்டுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். 2002ம் ஆண்டில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 1,50,000க்கும் அதிகமானோர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்றுப்போதல், உணவு செரிக்கும் சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு கால்கள் நீக்கபட வேண்டிய நிலைகூட வருகிறது. பற்களும் அதிகளவு பாதிக்கப்படுகிறது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம்.
''பிளாக் டீ'' குடித்தால் நோய் கட்டுப்படுமாம்
''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.
மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.
“பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.