தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். இவருக்கும் கருங்குளத்தை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கருங்குளத்தில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் திடீரென இறந்துவிட்டார்.அதன்பிறகு பேச்சியம்மாள் தனது 2மகள்களுடன் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகள் புனிதா (வயது13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறாள்.
மாணவி புனிதா தினமும் பள்ளிக்கு ரெயிலில் சென்று வந்தாள். இதற்காக கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் செல்வார். அதேபோல் மாலையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் நாசரேத்தில் இருந்து தாதன்குளத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து வீட்டிற்கு வருவாள்.
நேற்று(20-ந்தேதி) காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துபெருமாள் ஆகியோர் பலஇடங்களில் தேடினர். ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள், புனிதாவுடன் தாதன்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.
அப்போது நேற்று காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புனிதா மாயமானது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது. மாணவி புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. ஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.
ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
புனிதாக கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது தாய் பேச்சியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மற்றும் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.
ஆகவே கொலையாளிகள் அந்த வழியாகத்தான் தப்பித்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். ஆகையால் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நேற்று காலை முதல் மதியம் வரை யாரேனும் சந்தேகப்படும் வகையில் வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழக்கமாக ஏதாவது கும்பல் நடமாட்டம் இருக்குமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் கொலையாளிகள்குறித்து துப்புதுலக்கும் நடவடிக் கையில் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.
கொலை யாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரபரப்பு பள்ளிக்கு சென்றமாணவி கற்பழித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் கிளாக்குளம், தாதன்குளம் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் பேருந்தில் நடந்த கொடுஞ்செயலான கற்பழிப்பு சம்பந்தமாக போராட்டம் நடத்தும் ,கூப்பாடு போடும் கூட்டத்தார்களுக்கு தமிழகத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லையோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .