Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 டிசம்பர், 2012

மோட்டாரோலாவின் சென்னை பிரிவு மூடப்படுகிறது

மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம், சென்னையில் அதன் அலைபேசி சாதனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பிரிவை, வரும் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் மூட உள்ளது.பதிவேற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு, 172 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இப்பிரிவில், அலைபேசி சாதனங்களில் மென்பொருள்களை பதிவேற்றுவது மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இனி, அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக, வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி சாதனங்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கூகுள் நிறுவனம், மோட்டோரோலா குழுமத்தின் அலைபேசி சாதன பிரிவை கையகப்படுத்தியது.தென்கொரியா சர்வதேச அளவில், மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், 4,000 பணிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மொத்தம் உள்ள, 90 தொழிற்பிரிவுகளில், மூன்றில் ஒரு பங்கை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, 500 பேரைக் கொண்ட தென்கொரிய பிரிவை மூடப்போவதாக, நேற்று முன்தினம் இந்நிறுவனம் அறிவித்தது.

சென்னை தொழிற்பிரிவில், 72 பேர் பணிபுரிகின்றனர். அலைபேசி சாதனங்கள் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் உரிய நிவாரண தொகையும், பிற நிறுவனங்களில் பணி வாய்ப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இனி, புதுமையான, லாபகரமான அலைபேசி சாதனங்களை தயாரிக்க மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

துபாயில் "குறைந்து போன கடிதப் பழக்கம்" என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா


துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் கவிஞர் ஜெயராமன் ஆனந்தி எழுதிய குறைந்து போன கடிதப் பழக்கம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 14ம் தேதி காலை 10.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை ஜெயா பழனி பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் முத்துப்பேட்டை ஷரிபுத்தீன் வரவேற்க, ஹெல்த் கணேசன் தலைமையேற்று உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் ரவி பாரதி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழின் பெருமைகள் பற்றியும், கர்மவீரர் காமராசர் பற்றியும், கவியரசு கண்ணதாசன் படைப்புகள் பற்றியும் தனது அனுபவத்தோடு கலந்து வழங்கி அனைவரையும் கவர்ந்தார்.

நிகழ்வில் யு.ஏ.ஈ. தமிழ்ச்சங்கத் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் கலந்து கொண்டு தியாகம் மற்றும் பிறந்தநாள் தலைப்புகளில் எழுதிவந்த கவிதைகளை வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றார். விழாவில் விருதை மு.செய்யது உசேன், திண்டுக்கல் ஜமால், காவிரிமைந்தன், முகவை முகில், ஜெயாபழனி, வெற்றிவேல் செழியன், முதுவை ஹிதயத்துல்லா, கிளியனூர் இஸ்மத், யமுனா லிங்கம், பொற்செல்வி கண்ணன், ஆதிபழனி, ந.அழகப்பன், விவேகானந்தன், சுந்தர், மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் கவிஞர் இரவி பாரதிக்கு ரமேஷ் விஸ்வநாதன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். நினைவுப் பரிசினை கிளியனூர் இஸ்மத்தும், ரமேஷ் விஸ்வநாதனும் முத்துப்பேட்டை ஷரிபுத்தீனும்.
‘குறைந்து போன கடிதப் பழக்கம்’ கவிதை நூலின் முதல்பிரதியை கவிஞர் ரவி பாரதி வெளியிட கவிஞர் யமுனாலிங்கம் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை ரமேஷ் விஸ்வநாதன் வெளியிட முகவை முகிலும், மூன்றாம் பிரதியை பொற்செல்விகண்ணன் வெளியிட கவிதா பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் கவிஞர் ஜெயராமன் ஆனந்திக்கு வானலை வளர்தமிழ் சார்பில் சிறப்பு விருந்தினர் கவிஞர் இரவி பாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் காவிரிமைந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். நூலாசிரியருக்கு நினைவுப் பரிசினை விமல்ராஜ் வழங்கினார்.

கவிஞர் ஜெயராமன் ஆனந்தியின் ஏற்புரையைத் தொடர்ந்து அடுத்த மாதத் தலைப்புகளான ‘அலைகள்’ மற்றும் ‘கலைகள்’ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. விழாவின் தொடக்கம் மற்றும் முடிவில் பீர் முகம்மது திரைப்பாடல்கள் பாட்டியது விழாவிற்கு மற்றுமொரு சுவை சேர்த்தார்.அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்வினைதொகுத்து வ‌ழங்கினார். திண்டுக்கல் ஜமால் நன்றியுரையாற்றிட விழா நிறைவுக்கு வந்தது.

 நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ்,காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி, மற்றும்ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி ஆகியோருடன் இணைந்து முதுவை ஹிதாயத்துல்லா மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

-  செய்தியாளர் முதுவை ஹிதாயத்

லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


"நேரு யுவகேந்திரா அமைப்பு, ஒரு லட்சம்
இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளது,'' என, இந்த அமைப்பின் பொது இயக்குனர் சலீம் அகமது கூறினார்.

இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய விளையாட்டுத் துறையின், நேரு யுவகேந்திரா அமைப்பு, வரும், 2013ம் ஆண்டு, வெள்ளி விழா கொண்டாடுகிறது.

இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கலில், இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. நாடு முழுவதும், அனைத்து கிராமங்களிலும், இளைஞர் மன்றம் ஏற்படுத்தப்படும்.
வரும் 2013ம் ஆண்டு, பிப்., 13ம் தேதி, டில்லி, பல மாநிலங்களைச் சேர்ந்த, ஒரு லட்சம் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 4,350 பெண்களுக்கு, கணினி, தையல் உள்ளிட்ட பல தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு சலீம் அகமது கூறினார்.

3 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பள்ளிக் கட்டடம்


ரிஷிவந்தியம் அருகே கட்டி திறக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் வீணாகி வருகிறது.

 ரிஷிவந்தியம் ஒன்றியம், நூரோலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 153 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 2 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

 இங்கு போதிய கட்டட வசதியின்றி மாணவர்கள் தவித்து வந்தனர். இதையடுத்து கடந்த 2008-09-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டடம் மற்றும் சமையறைக் கூடம் புதிதாகக் கட்டப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிந்து கடந்த 3 ஆண்டுகளாக தயார் நிலையில் காணப்படும் இக்கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பழைய பள்ளிக் கட்டடத்தில் போதிய இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியிலும், கட்டாந்தரையிலும் தற்போது கல்வி பயின்று வரும் நிலை உள்ளது. திறக்கப் படாமல் காட்சிப் பொருளாக மாறிப் போன வகுப்பறைக் கட்டடத்தை திறந்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஏ.வெங்கடேசனிடம் கேட்டபோது, கழிப்பறை அமைத்த பின்புதான் 3 வகுப்பறைக் கட்டடம் திறக்கப்படும் என்றார்.