முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆட்சியர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழில் துவங்க, தமிழக அரசு, 25 சதவீத மானியத்தில், 5 லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி வருகிறது.
நடப்பாண்டில், தகுதியான தொழில் முனைவோர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், மகளிர் தொழில் முனைவோருக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சேவை மற்றும் உற்பத்தி தொழில் துவங்க விருப்பம் உள்ள பொதுப்பிரிவினர், தங்களது பங்களிப்பாக, முதலீட்டு தொகையில், 10 சதவீதம், சிறப்பு பிரிவினர், 5 சதவீதம் செலுத்த வேண்டும்.
தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். கடன் தொகையை முறையாக செலுத்தினால், 25 சதவீத மானியத்துடன், மூன்று சதவீதம் வட்டி மான்யமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் விண்ணம்பம் செய்பவர்கள், இளநிலை பட்டதாரிகள் அல்லது பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும், அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், 25 முதல், 35 வயதிற்குட்பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினரான, மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவனத்தினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகியோர், 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை. உரிமையாளர், பங்குதாரர் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரர்களும் திட்டத்தின் தகுதிகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தின், இரு நகல்களில், வயதிற்கான சான்று, இருப்பிட சான்று, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி, கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பட்ட, பட்டய சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், முன்னாள் ராணுவனத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையாக இருப்பின், அதற்கான சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
திட்ட அறிக்கை மற்றும் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான, உத்தேச விற்பனை மற்றும் மொத்த வருமானம் அறிக்கை, திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட்டிருந்தால், நிலபட்டாவின் நகல், இயந்திரங்கள் அல்லது கருவிகளின் அசல், நகல் விலைப்பட்டியல், சான்று உறுதி மொழிப் பத்திரம், மாவட்ட தொழில் மையத்தில் இருந்து பெறப்பட்ட தொழில் முனைவோர் பதிவறிக்கை(பாகம்1) ஒப்புகை சான்று, பங்குதார் நிறுவனமாக இருந்தால், கூட்டு ஒப்பந்த்தின் பத்திர நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் ஏற்கனவே கடன் பெற்று திரும்பி கட்ட தவறியவர்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்கள், மத்திய, மாநில அரசின் பிற திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
இத்திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நேர்முக தேர்வின் மூலம் பரிசீலிக்கப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.