Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

* சுற்றுலா பயணிகளை கவர குடில்கள்* வால்பாறையில் அமைத்தது வனத்துறை


வால்பாறை பகுதியில் வனத்துறையினர் குடில்கள் அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் பசுமை மாறாக்காடுகளும், பசுமையான தேயிலை தோட்டங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இயற்கை அன்னையின் படைப்பில் உருவான, வால்பாறையில் உள்ள தேசியப்பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ், நீர்வீழ்ச்சிகள், அணைகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், பல்வேறு வகையான வனவிலங்குகள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

இவர்களை கவரும் வகையில், வால்பாறையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் "கோடைவிழா' நடத்தப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு, மலர் கண்காட்சி, நாய்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பர்.

இவர்களை கவரும் வகையில் வனத்துறை, நகராட்சி, சுற்றுலாத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும், வால்பாறை டவுன் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன.

இது தவிர, தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கலார் நீர்வீழ்ச்சிக்கும், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல்ஆறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆழியாரிலிருந்து வால்பாறை வரும் வழியில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கி ஓய்வெடுக்க, அங்காங்கே பல இடங்களில் மூங்கில்களால் வேயப்பட்ட குடில்கள் உள்ளன.

வனத்துறை சார்பில், அட்டகட்டி சோதனை சாவடி அருகே மூன்று குடில்கள் கட்டப்பட்டுள்ளன. வால்பாறை வரும் வழியில், வனவிலங்குளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மது மற்றும் சிகரெட் குடிக்கக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் இணைய சேவை துண்டிப்பு: ஹால் டிக்கெட் கொடுப்பதில் சிக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள இணைய சேவைக்கான நிலுவை தொகை கட்டப்படாததால், சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அடுத்த மாதம் நடக்க உள்ள, பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 167 உயர்நிலை பள்ளிகளும், 107 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பயிலும், 52,208 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 35,688 பிளஸ் 2 மாணவர்களும், பொது தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், மார்ச் 1ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ம் தேதி, தொடங்கி ஏப்., 15ம் தேதி, வரை தேர்வு நடக்க உள்ளது.

இலவச சேவை பள்ளிகளின் அனைத்து நிர்வாக வேலைகளும், கணினிமயமாக்க முடிவான பின், 2009ம் ஆண்டு, எல்காட் நிறுவனம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும், இலவச இணைய சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போது, பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள், துறை அதிகாரிகளின் கடிதங்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

மேலும், பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகள் இணையம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதை பள்ளி நிர்வாகம் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜன., 18ம் தேதி, அனைத்து மேல் நிலை பள்ளிகளுக்கும், எல்காட் நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்தது. அதில், "2010-11 மற்றும் 2011-12 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, இணைய சேவை பயன்படுத்தியதற்காக, 12 ஆயிரம் ரூபாய் வரை, பில் தொகை செலுத்த வேண்டும். ஜனவரி மாதம் இறுதிக்குள், பில் தொகை செலுத்தாத பட்சத்தில் இணைப்பு துண்டிக்கப்படும்" என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

பெரும்பாலான பள்ளிகள் பில் தொகையை செலுத்தாததால், கடந்த, 1ம் தேதி முதல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விரைவில் நடக்கவுள்ள பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகளை எப்படி கொடுப்பது என, தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "துப்புரவு தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற இதர செலவுகள், பெற்றோர் கழக நிதியில் இருந்து கொடுத்து வருகிறோம்" என்றார்.

மேலும், "தற்போது, இணைய சேவைக்கான தொகை, 12 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என, எல்காட் நிறுவனம் கடிதம் அனுப்பியது. முதலில் இலவசம் என்று சொல்லி, பின் இப்படி பணம் கேட்டால், எங்கிருந்து கொடுக்க முடியும்" என்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, எல்காட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த தி.மு.க., ஆட்சியில், இணைய சேவை இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது உள்ள, அ.தி.மு.க., அரசு கட்டணம் வசூலிக்கும் படி தெரிவித்து உள்ளது. இந்த கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தாமல், இரண்டு மூன்று தவணைகளில் செலுத்தும்படி, பள்ளிகளுக்கு தெரிவித்து உள்ளோம்" என்றார்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறுகையில், "இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறித்த விவரம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரம் கிடைத்தவுடன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் உள்ள நிதியை கொண்டு, இணையதள சேவைக்கான கட்டணம் செலுத்தப்படும்" என்றார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்


1959ல் இந்திய ஜெர்மனி உடன்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட சென்னை ஐ.ஐ.டி., சாதனைகளில் முத்திரை பதித்து வருகிறது. இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கோடைகால பெல்லோஷிப் புரோகிராம் நடத்தப்படும்.

தேவை என்ன?
சென்னை ஐ.ஐ.டி.,யின் கோடைகால பெல்லோஷிப் படிப்பில் பின்வரும் தகுதி உடையவர்கள் இணையலாம் : தற்போது பி.இ., பி.டெக்.,பி.எஸ்சி., (இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகளில் மூன்றாவது ஆண்டு படிப்பவர்கள், இன்டகரேடட் எம்.இ., எம்.டெக்., படிப்பவர்கள், எம்.இ.,எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ.,எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளில் பல்கலைக் கழக அளவில் முதன்மை பெற்றவர்கள், கணித ஒலிம்பியாட் போன்ற முக்கிய கருத்தரங்கங்களில் தங்களது படைப்புகளை வழங்கியவர்கள், மற்றும் இதர சிறப்பு பெற்ற
சாதனையாளர்கள். ஐ.ஐ.டி.,யில் படித்து வரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

ஊக்கத் தொகை எவ்வளவு?
இந்த பெல்லோஷிப் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிக பட்சம் இரண்டு மாதங்களுக்குத் தலா ரூ.6,500 ஸ்டைபண்டாகப் பெறலாம்.

என்னென்ன பிரிவுகள் ?
சென்னை ஐ.ஐ.டி., நடத்தும் கோடைகால பெல்லோஷிப் திட்டத்தில் ஏரோஸ்பேஸ், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் டிசைன், எலக்ட்ரிகல், மெக்கானிகல், மெட்டலர்ஜிகல் அண்டு மெட்டீரியல்ஸ், ஓஷன் ஆகிய இன்ஜினியரிங் துறைகளும், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் துறைகளும், ஹியூமானிடிஸ் அண்டு சோசியல் சயின்ஸ் மற்றும் நிர்வாகவியல் துறைகளும் பங்கு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ஐ.ஐ.டி.,யின் பெல்லோஷிப் திட்டத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவைப்படும் இணைப்புகளையும் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி 
The Head of the Department,
Department of (Concerned Dept),
Indian Institute of Technology Madras,
Chennai - 600036.