இயற்கை அன்னையின் படைப்பில் உருவான, வால்பாறையில் உள்ள தேசியப்பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ், நீர்வீழ்ச்சிகள், அணைகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், பல்வேறு வகையான வனவிலங்குகள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
இவர்களை கவரும் வகையில், வால்பாறையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் "கோடைவிழா' நடத்தப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டு, மலர் கண்காட்சி, நாய்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பர்.
இவர்களை கவரும் வகையில் வனத்துறை, நகராட்சி, சுற்றுலாத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும், வால்பாறை டவுன் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன.
இது தவிர, தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கலார் நீர்வீழ்ச்சிக்கும், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல்ஆறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆழியாரிலிருந்து வால்பாறை வரும் வழியில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கி ஓய்வெடுக்க, அங்காங்கே பல இடங்களில் மூங்கில்களால் வேயப்பட்ட குடில்கள் உள்ளன.
வனத்துறை சார்பில், அட்டகட்டி சோதனை சாவடி அருகே மூன்று குடில்கள் கட்டப்பட்டுள்ளன. வால்பாறை வரும் வழியில், வனவிலங்குளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மது மற்றும் சிகரெட் குடிக்கக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக