வெளிநாடுகள் செல்வதற்காக, கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி பெறுவதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறைக்கு வரும் பொது மக்களை அலுவலர்களும், அதிகாரிகளும் தினமும் அலைய விடுகின்றனர்.
போதுமான விவரங்களைத் தெரிவிக்க தனியாக கவுன்சிலர்கள் நியமிக்கப்படாததால் அந்தப் பிரிவு முழுவதிலும் லஞ்சம் பெருக்கெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயர் கல்வியை முடித்தவர்கள், குடும்பத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய நினைக்கும் பெண்கள் என அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், திருமண பதிவுச் சான்றிதழ்களை பொதுத்துறையில் உள்ள வெளிநாட்டினர் பிரிவில் சமர்ப்பித்து உரிய அத்தாட்சியைப் பெறுவது அவசியம். இந்தப் பணியை முடித்த பிறகே வெளிநாடு செல்வதற்கு உரிய அனுமதியைப் பெற முடியும்.
இந்த அத்தாட்சியை உடனடியாகப் பெற விரும்புவோர் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கே வந்து பொதுத்துறையில் அதற்கான பிரிவை அணுகுகிறார்கள். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. அத்தாட்சியைப் பெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும். எந்தெந்த விண்ணப்பத்தை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைப்பதில்லை.
இடைத்தரகர்கள் ராஜ்யம்: அத்தாட்சி பெறுவோருக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில், துறையில் உள்ள அலுவலர்களைக் கேட்கும் போது, உரிய முறையில் அவர்களும் பதில் தருவதில்லை. இதனால், வேறு வழியின்றி துறைக்குத் தொடர்பில்லாத அதே சமயம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் உள்ள இடைத்தரகர்களை பொது மக்கள் நாட வேண்டியுள்ளது.
இடைத்தரகர்கள் ஒவ்வொரு சான்றுக்கும் மக்களின் அவசரத் தேவைக்கு ஏற்ற வகையில், பணம் வசூலிக்கின்றனர். ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒவ்வொரு சான்றிதழுக்கும் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த இடைத்தரகர்களுக்கும், பொதுத்துறையில் வெளிநாட்டினர் பிரிவில் கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்த சான்றிதழில் அத்தாட்சி பெற வேண்டுமென அந்த சான்றிதழின் அசலானது, அதை வழங்கிய தமிழக அரசுத் துறைக்கு அனுப்பப்படும். அது எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உண்மைத் தன்மை ஆராயப்படும்.
பொது மக்கள் தங்களது அசல் சான்றிதழை அத்தாட்சிக்காகக் கொடுத்துச் செல்வதால் அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இடைத்தரகர்களை அணுகி விரைவாகப் பெற்றுச் செல்ல முனைகின்றனர்.
தகவல் அளிப்பவர் இல்லாதது ஏன்? தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் கல்வி மற்றும் திருமண பதிவின் அசல் சான்றிதழ்கள் அனுப்பப்படும் சூழலில், அதுகுறித்த நிலையை தெரிவிக்க தகவல் அளிப்பவர் அந்தப் பிரிவில் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.
வெளிநாடு செல்லும் கனவுகளுடன் தலைமைச் செயலகம் வந்து சான்றிதழ்களில் அத்தாட்சி பெற வரும் பொது மக்களை அலைக்கழித்து வெறுத்து ஓடச் செய்கிறது பொதுத்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக