Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 6 செப்டம்பர், 2012

இளைய சமுதாயமே ! மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா !


மத்திய அரசால் சிறுபான்மையின மக்களின் நிலையை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார்  மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிசன்களின்  அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
 முஸ்லிம்களின் கல்வியறிவைக் குறித்து "இந்தியா டுடே" ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வறிக்கை சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நல்லதோர் முன்னெச்சரிக்கையாகும்.அந்த ஆய்வறிக்கையில் ,
  
"2001- ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் கல்வியறிவைப் பெறுவதில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதைத்  தெரிவிக்கிறது. 1881- க்கு பிறகு அகில இந்திய அளவில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புகளில் இது மிக விரிவானது (சமீபத்தில் வெளியாகியுள்ள ஸச்சார் அறிக்கை இக்கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டதே). 2001-லேயே இக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டாலும் பல தகவல்களை கணக்கெடுப்பு ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது.
நாட்டின் மொத்த முஸ்லிம்களில் 61 சதவீதத்தினர் இம்மாநிலங்களில்தான் இருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள மற்றும் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவிலும் கூட இதே நிலைதான். குஜராத் மற்றும் ஆந்திராவில்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களின் கல்வி நிலை இருக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரம் என எல்லா வகையிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பக்கல்வியில் ஆரம்பிக்கும் இவ்வித்தியாசம் கல்வி நிலை உயர உயர அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
மேலும் இதில் ஆண், பெண் வர்க்க பேதமும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆணுக்கு கிடைக்கும் கல்வி, முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பக் கல்வியில், பெருநகரம் மற்றும் சிறு நகரங்களில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் ஆண்களை விட 18% குறைவாகவே பெண்கள் கல்வி பெறுகிறார்கள். கல்லூரி அளவில் உயரும்போது இது 48% அதிகரிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் கல்வி விகிதத்தை அடைவதற்கு 2011-ம் ஆண்டிற்குள் 31 மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கவேண்டும்" என்று கூறுகிறது .

சமீபத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மத்திய அரசு தீர்மானம் எடுப்பதற்கு முயன்றபோது அனைத்து ஃபாசிஸ சக்திகளும் இணைந்து நாட்டுப் பாதுகாப்பை காரணம் காட்டி அதனை எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.
இன்னும் சொல்லப்படாத கணக்கெடுக்கப்படாத விவரங்கள் எத்தனையோ உள்ளன. 

   தமிழகத்தை பொருத்தவரை ,கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று 3.5 % இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது . பின்பு , அதனை சரியாக அதிகாரிகள் நிரப்பவில்லை என்று தகவல் வந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று திமுக அரசு கண்காணிப்பு குழு அமைத்தது .முறையாக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறப்பப்படுகிறதா ? என்பது கண்காணிக்கப்பட்டது ; ஆனால் , நம்  சில துறைகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அரசு நிரப்பும் போது முஸ்லிம்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது .

             இந்த நிலையில் ,நம் தாய் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தீர சிந்தித்து ,இந்த நிலை இனி தொடரக்கூடாது ,கல்வி நிலையில் நம் சமுதாயம் இன்னும் முன்னுக்கு வர வேண்டியுள்ளது ,இதற்க்கு சமுதாய மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர் .

      அதன் அடிப்படையில் ,எதிர்வரும் செப்டெம்பர் 08 - ஆம் நாள் கும்ப கோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஏதோ ,முஸ்லிம் லீக்கினர் திடீர் என்று கட்சியை வலுப்பைபடுத்த இவ்வாறு நடத்துகிறார்கள் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்துவிடக்கூடாது .

 முஸ்லிம் லீக்கின் துவக்கமே ,முஸ்லிம்களின் கல்விநிலை முன்னேற்றத்திற்கும் ,இட ஒதுக்கீட்டிற்கும் தான் .அந்த இரண்டு நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது .

                  எனவே ,முஸ்லிம்களின் கல்வி நிலை உயர ,மத்திய மாநில அரசுகள் நம் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள உரிமைகளை நாம் முழுமையாக பயன்படுத்திட வழிகாண நம் சமுதாயத்தை செம்மையோடு வழி நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைக்கின்றது ,செப் -08 -இல் கல்வி விழிப்புணர்வு மாநாடு !
             
                 தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி பெற்றிட , அகில இந்த அளவில் முஸ்லிம்களுக்காக மத்தியரசின் 10 % இட ஒதுக்கீடு கிடைத்திட ,வலுவான முறையில் மத்திய ,மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கை குரல் கேட்டிட , அழைக்கின்றது நம் இனமானப் பேரியக்கம் ,செப்-08 ,கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

                             நாம் நடந்து வந்த பாதை என்ன ? இனி நாம் நடை போடும் பாதை எப்படி பட்டது ? நாம் எவ்வாறு நடந்து சென்றால் வெற்றி இலக்கை அடையலாம் ? என்ற கேள்விகளுக்கு விடை கண்டிட அழைக்கின்றது தாய் சபை செப்-08 கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

          இளைய சமுதாயமே !  மாணவச் சமுதாயமே ! நம் நிலையை நாமே உயர்த்திட ,கும்ப கோணம் நோக்கி வா ! திணரட்டும் கும்பகோணம்! அறியட்டும் நம் நிலையை அரசாங்கம் ! 

-------------அபு ஆஸிமா
             
நன்றி : மணிச்சுடர் 

எதிர்கால தலைவர்களின் பரிதாப நிலை பாரீர் !


சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந்தேதி நடந்தது. இதில் தலைவராக மாணவர் ஞானகார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்றார். முடிவு அறிவிக்கப்பட்டதும் ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது தோல்வியடைந்த மாணவரின் ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற மாணவரின் ஆதரவாளர்களும் கல்வீச்சு நடத்தி மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் 2-ம் ஆண்டு பிகாம். மாணவி செவ்வந்தி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்டது. இதுதெரியாமல் 2 பஸ்களில் மாணவர்கள் கல்லூரி முன் வந்து இறங்கினார்கள். அவர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதே சமயம் கடற்கரை சர்வீஸ் சாலையில் திரண்டு இருந்த மாணவர்கள் பட்டாசு வெடித்த மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரியில் இருந்து 3 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.

இன்று காலையும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்


பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. 

அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். 

நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும்.. வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள். 

குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர். வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது. மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள். சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். 

முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும். மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். 

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்