சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந்தேதி நடந்தது. இதில் தலைவராக மாணவர் ஞானகார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்றார். முடிவு அறிவிக்கப்பட்டதும் ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது தோல்வியடைந்த மாணவரின் ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற மாணவரின் ஆதரவாளர்களும் கல்வீச்சு நடத்தி மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் 2-ம் ஆண்டு பிகாம். மாணவி செவ்வந்தி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்டது. இதுதெரியாமல் 2 பஸ்களில் மாணவர்கள் கல்லூரி முன் வந்து இறங்கினார்கள். அவர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதே சமயம் கடற்கரை சர்வீஸ் சாலையில் திரண்டு இருந்த மாணவர்கள் பட்டாசு வெடித்த மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரியில் இருந்து 3 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.
இன்று காலையும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக