வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம்(Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்: மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்: மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி: ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.