சேர்ந்தமரம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளது. இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள சேர்ந்தமரம் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள சேர்ந்தமரம் வீரசிகாமணி, திருமலாபுரம், தன்னூத்து, குலசேகரமங்கலம், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், ஆனைகுளம், வெள்ளாயன்குளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டும், கிணறுகளில் தண்ணீரின்றி வற்றியும் காணப்படுகிறது.
இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.தென்னை மரங்கள் அழியும் அபாயத்திலும், பல நூறு ஆண்டு பலன் தரும் பனை மரங்கள் கூட வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என காட்சிதரும் இப்பகுதி விவசாய நிலங்கள், தற்போது வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறியுள்ளது. மேற்கு தொடச்ச்சி மலையில் உள்ள கருப்பாநதியின் பாசன நீர் கிடைக்காதது இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். உரிய நீர் ஆதாரமின்றி நிலத்தடி நீரும் குறைந்துள்ளது.
சுமார் 300 மற்றும் 500 அடி ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் பயிரிட்டுள்ள மா, தென்னை, தேக்கு மரக்கன்றுகளை காப்பாற்ற வெகு தொலைவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். விவசாயிகளின் இந்த அவலநிலையை போக்க எதிர்காலத்தில் கருப்பாநதி அணை நீரை பகிர்ந்தளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் பெற மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக