தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமையில் நாளை நடக்கிறது. இது குறித்து நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புதிய கடன் திட்டம்
தமிழக முதல்–அமைச்சர் இளைஞர்களுக்கு தொடங்க மானியத்துடன் கூடிய சுய தொழிற் கடனான ரூ.1 கோடி வரை வழங்கும் “நீட்ஸ்“ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் தகுதி பெறுகின்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிகள் தொடங்க அதிக பட்ச முதலீடு ரூ.1 கோடி வரையிலும் வங்கிகள் வழியாக கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட முதலீட்டில் 25 சதவீதத்துக்கு மிகாமலும், அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சிப்காட், சிப்கோ போன்றவற்றில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
கருத்தரங்கு
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்திய வாட் வரி முழுவதும் மானியமாக வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். உற்பத்தி சார்ந்த பயன்பாட்டுக்கான நிறுவனங்கள் ஜெனேட்டர் வாங்கினால் முதலீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. முறையான கடன்தவணையை திருப்பி செலுத்தும் நிறுவனங்களுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி வழங்கப்படும். தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கருத்தரங்கத்துக்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்குகிறார். தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.