Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன


கோவை கிளையின் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் சார்பில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், ரகுமான்கானுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அமைச்சர் ரகுமான்கான் நிருபர்களிடம் கூறியதாவது : "2ஜி' ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஊழல் தொடர்பான, மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை, இறுதியானது இல்லை; தற்காலிகமானது. பாராளுமன்ற கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையே இறுதியானது. மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அதிகாரத்தை குறைக்க, மத்திய அரசு, எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.நம்நாட்டில், ஐந்து பிரிவுகளில், மொத்தம், 22 கோடி சிறுபான்மையினர் மக்கள் உள்ளனர். இதில், சிறுபான்மையினர் வசிக்கும், 90 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.

இதை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில், குழந்தைகளுக்கான கல்வி, பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. வக்பு வாரிய மசோதாவை, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கு சொந்தமான, நான்கு லட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்பு மீட்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் ரகுமான் கான் கூறினார்.

மதுரை பகுதியில் வறட்சியின் கோரத்தால் செத்து மடியும் கன்றுகள்


மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடும் வறட்சியால் கால்
நடைகள் மேய்ச்சலின்றி தவிக்கின்றன. பால் இன்றி, கன்றுகள் மடிந்து வரும் பரிதாபச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையில் பயன்பெறும் தமிழகத்திற்கு, இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, தென்மாவட்டங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மழையில்லாமல், விவசாய பயிர்கள் கருகின. வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக இருந்ததால், கண்மாய்கள் வறண்டன.
நீரின்றி காய்ந்த பயிர்களை, விவசாயிகளே கால்நடைகளுக்கு இரையாக்கினர். நடப்பாண்டு விவசாயம் பொய்த்து போன நிலையில், அதை நம்பியிருந்த கால்நடைகளுக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. நீரின்றி
மேய்ச்சல் புற்கள், சருகாய் மாறியுள்ளன.

குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தவிக்கின்றன. வெளியூரிலிருந்து வரும் மாடுகள், தங்கள் கிராமத்தில் மேய்ச்சலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தகராறுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேய்ச்சல் குறைந்ததால், பசுக்களின் பால் உற்பத்தி பாதித்து, கன்றுகள் இறப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாய் மேய்ச்சலுக்கு, ஒரு மைல் தூரம் பயணிக்கும் மாடுகள், தற்போது ஆறு மைல் தூரம் வரை, நடக்கின்றன.அதிலும் மேய்ச்சலின்றி, சோர்வடைந்து, எடை குறைந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம்
பழையனூர், வல்லாரேந்தலில் இருந்து, மதுரை களிமங்கலம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த மாடுகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், வேறு பகுதிக்கு நடைகட்டின.

ஊர்காவலன், 65, கூறியதாவது: விபரம் தெரிந்த நாள் முதல், கால்நடை மேய்ச்சல் தொழிலில் உள்ளேன். இப்படியொரு பஞ்சத்தை பார்த்ததில்லை. மழையின்றி, நிலங்கள் வறண்டு போயுள்ளன; குளங்களில் நீரில்லை. இரையின்றி மாடுகள் மயங்குகின்றன. வேறு ஊருக்குச் சென்றால், "எங்கள் மாடுகளுக்கு மேய்ச்சல் வேண்டும்,' என, விரட்டுகின்றனர். நேற்று ஒரு கிராமத்தில், அடித்து விரட்டினர்;தப்பி வந்தோம். எங்களின் ஏழு கன்றுகள், இதுவரை இறந்துள்ளன. இரை இல்லாமல், மாடுகள் அனைத்தும்,
"அடிமாடு' தோற்றத்திற்கு மாறிவிட்டன, என்றார்.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் கிரைண்டர் கல் உற்பத்தி பாதிப்பு


அனுப்பர்பாளையம்:தொடர் மின்வெட்டால், அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. எனவே, சீராக மின்சாரம் வழங்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தபாளையம், நல்லகட்டிபாளையம், சர்க்கார் பெத்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல் பட்டறைகள் உள்ளன. ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கப்படுகின்றன. சிறிய முதலீட்டில், இயந்திரம் மூலம் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி, 5,000 தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்கள், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கும் சென்று ஆர்டர் பெற்று வந்து உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் பாறைகள் உள்ளன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கருங்கல் மிக கடினமானதாகவும், எளிதில் உடையாத தன்மை கொண்டதாகவும் இருக்கும்.அதன் காரணமாகவே, ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் செய்ய உகந்ததாக உள்ளது. எளிதில் உடையாமல் தரம் உள்ளதாக இருப்பதால், வியாபாரிகள் பலர் இப்பகுதிக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்குமுன் ஆர்டர்கள் ஏராளமாக வந்தன.
தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் ஆர்டர் குறைந்து உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இத்தொழி லுக்கு 90 சதவீதம் மின்சாரம் அவசியம். உற்பத்தி குறைவால், தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை நம்பியிருந்த தொழிலாளர்கள் பலர், திருப்பூர் பனியன் தொழிலுக்கு செல்வதிலும், கால்நடை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர் மின்வெட்டு, தொழிலாளர் பிரச்னை போன்றவற்றால், தொழில் செய்ய முடியாமல் பலர் பட்டறையை மூடி வருகின்றனர்.

பட்டறை உரிமையாளர் ராஜாமணி கூறுகையில், ""இத்தொழில் மின்சாரத்தை நம்பியே உள்ளது. போதிய ஆர்டர் இருந்தும் மின்வெட்டால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், 40 எண்ணிக்கையில் பொருட்கள் தயாரித்தோம்; தற்போது 20 மட்டுமே தயாரிக்க முடிகிறது. வேலை குறைந்ததால் வருமானம் இல்லை.

""தொழிலாளர்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். அரசு ஊக்கம் அளித்தால், தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதிகமானோருக்கு வேலை கிடைக்கும். இது, குடிசை தொழில் என்பதால் வங்கிகள் கடன் தருவதில்லை. பெரிய அளவில் பட்டறை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்க உதவ வேண்டும். தடையில்லாமல் சீராக மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.

ஆனைமலை, முதுமலை சரணாலய பகுதிகளுக்கு கடிவாளம்!


ஆனைமலை, முதுமலை வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டிய 10 கி.மீ., சுற்றளவு பகுதிகள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக (இகோ- சென்சிடிவ்) விரைவில் அறிவிக்கப்படுகின்றன. இது குறித்த பரிந்துரைகளை, பிப்., 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய, மாநில வனத்துறைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் அருகில் உள்ள பகுதிகளில், அபரிமித வளர்ச்சியடைந்து வருகின்றன.
இதனால், காடுகள் அழிப்பு, வனவிலங்கு நடமாட்டத்துக்கு இடையூறு, மனித - வன உயிரின மோதல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
காடு வளம் குறைவதால், மழை குறைந்து பருவநிலை மாற்றம், கடும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், வளர்ச்சித் திட்டங்களுக்கு கடிவாளமிடும் விதத்தில், முக்கிய தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் அருகே, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டு, ஒவ்வொரு மாநில வனத்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால், தற்போது மீண்டும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக, முதன்மை வன உயிரின காப்பாளர்களுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுலாத் துறை வன உயிரின பிரிவு டி.ஐ,ஜி., விவேக் சக்சேனா அனுப்பியுள்ள கடிதத்தில், "தேசிய பூங்காக்கள் மற்றும் வன உயிரின காப்பகங்கள் அருகில் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த பரிந்துரை அளிக்க இறுதி வாய்ப்பு தரப்படுகிறது. வரும் பிப்., 15ம் தேதிக்குள் பரிந்துரை அளிக்க வேண்டும்' என, "கெடு' விதிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, எட்டு வனவிலங்கு சரணாலயங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் காப்பகங்கள், நான்கு யானைகள் காப்பகங்கள், 12 பறவை சரணாலயங்கள், மூன்று வன உயிரின மண்டலங்கள் உள்ளன.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பூங்காக்கள் மற்றும் வன உயிரின சரணாலயங்கள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஆகியவை, வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்கா, புலிகள் காப்பகம், யானைகள் காப்பகம் என பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ளதால், அதிமுக்கியத்துவம் வாய்ந்த சூழல் பகுதிகளாக உள்ளன.

இப்பகுதிகள் ஏற்கனவே சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக தான் உள்ளன. எனினும், அருகில் உள்ள 10 கி.மீ., சுற்றளவு பகுதிகள் முறைப்படி, "இகோ-சென்சிடிவ்' என, மத்திய வனத்துறையால் அறிவிக்கப்படும்போது, வளர்ச்சித் திட்டங்கள் தடை செய்யப்படும்; சுற்றுலா திட்டங்களும் முறைப்படுத்தப்படும்.குறிப்பாக, கல்குவாரி பணிகள், மர அறுவை மில்கள்,
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள், வணிக ரீதியில் விறகு பயன்பாடு, நீர்-மின் திட்டங்கள், திடக்கழிவுகளை இயற்கை
நீர் ஆதாரங்களில் வெறியேற்றுதல் போன்றவற்றுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும்.

மரம் வெட்டுதல், ஓட்டல்கள் - விடுதிகள், விவசாயம், ஆழ்குழாய் கிணறு, மின் கம்பம், வேலி அமைத்தல், பிளாஸ்டிக் - பாலித்தீன் பயன்பாடு, சாலை அகலப்படுத்துதல், இரவு நேர வாகன போக்குவரத்து போன்றவை முறைப்படுத்தப்படும்.இவ்வாறு, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.