அனுப்பர்பாளையம்:தொடர் மின்வெட்டால், அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. எனவே, சீராக மின்சாரம் வழங்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தபாளையம், நல்லகட்டிபாளையம், சர்க்கார் பெத்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல் பட்டறைகள் உள்ளன. ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கப்படுகின்றன. சிறிய முதலீட்டில், இயந்திரம் மூலம் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி, 5,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கும் சென்று ஆர்டர் பெற்று வந்து உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் பாறைகள் உள்ளன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கருங்கல் மிக கடினமானதாகவும், எளிதில் உடையாத தன்மை கொண்டதாகவும் இருக்கும்.அதன் காரணமாகவே, ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் செய்ய உகந்ததாக உள்ளது. எளிதில் உடையாமல் தரம் உள்ளதாக இருப்பதால், வியாபாரிகள் பலர் இப்பகுதிக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்குமுன் ஆர்டர்கள் ஏராளமாக வந்தன.
தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் ஆர்டர் குறைந்து உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இத்தொழி லுக்கு 90 சதவீதம் மின்சாரம் அவசியம். உற்பத்தி குறைவால், தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை நம்பியிருந்த தொழிலாளர்கள் பலர், திருப்பூர் பனியன் தொழிலுக்கு செல்வதிலும், கால்நடை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர் மின்வெட்டு, தொழிலாளர் பிரச்னை போன்றவற்றால், தொழில் செய்ய முடியாமல் பலர் பட்டறையை மூடி வருகின்றனர்.
பட்டறை உரிமையாளர் ராஜாமணி கூறுகையில், ""இத்தொழில் மின்சாரத்தை நம்பியே உள்ளது. போதிய ஆர்டர் இருந்தும் மின்வெட்டால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், 40 எண்ணிக்கையில் பொருட்கள் தயாரித்தோம்; தற்போது 20 மட்டுமே தயாரிக்க முடிகிறது. வேலை குறைந்ததால் வருமானம் இல்லை.
""தொழிலாளர்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். அரசு ஊக்கம் அளித்தால், தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதிகமானோருக்கு வேலை கிடைக்கும். இது, குடிசை தொழில் என்பதால் வங்கிகள் கடன் தருவதில்லை. பெரிய அளவில் பட்டறை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்க உதவ வேண்டும். தடையில்லாமல் சீராக மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக