பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், விடுதிகளில் தங்கி படிக்க, மாநிலம் முழுவதும், 1,238 விடுதிகள் இயங்கி வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்படும், இந்த விடுதிகளில், 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இவர்களில், கல்லூரிகளில் படிக்கும், 12 ஆயிரம் மாணவர்களும் அடக்கம்.
இதில், கல்லூரி மாணவர்கள் தங்கி வரும், 103 விடுதிகளில், மின்விளக்கு மற்றும் மின் விசிறிக்கு தேவைப்படும். மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம் பெறுவதற்கு, அந்தந்த விடுதிகளில், சூரிய சக்தி மூலம், மின்சாரம் பெறும் கருவியை அமைப்பதற்கு, தமிழக அரசு, 2.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம், இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும், சூரியசக்தி மூலம், மின்சாரம் பெறும் கருவியை அமைக்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: சூரிய மின்சக்தி கருவி பொருத்துவதற்கு, அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அனைத்து விடுதிகளிலும் இக்கருவியை அமைக்க, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.இதன் மூலம், மாணவர்கள் தடையின்றி படிக்க வாய்ப்பு ஏற்படும்.
கல்லூரி விடுதிகளில் இது செயல்படும் விதத்தை அறிந்த பின்னரே, அனைத்து விடுதிகளிலும் விரிவாக்குவது குறித்து, அரசு முடிவு செய்யும் என, தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக