Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 2 பிப்ரவரி, 2013

முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா?


கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.

ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.

இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.

மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.

அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?

ஒரே தீர்வுதான். அது, ஊடகங்களை முஸ்லிம்களும் கையாள்வது. செய்திகளைப் படிக்கும் இடத்திலும், பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை இந்தப் பிரச்சனை தொடரவே செய்யும். செய்திகளை உருவாக்கும் இடத்தை நோக்கி முஸ்லிம்கள் நகரும் போதுதான் உண்மையான தீர்வு கிடைக்கும்.

செய்திகளை உருவாக்கும் இடமெனில் அது வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம் மட்டுமல்ல, இவை எல்லாவற்றையும்விட வலிமையான செய்தி ஊடகமாக சினிமாவே உள்ளது. பலரும் சினிமாவை ஒரு கலை ஊடகமாகவே பார்க்கின்றனர். ஆனால், கலையின் வழியாக மிகப்பெரும் செய்திகளை பார்வையாளருக்கு சினிமா சென்று சேர்ப்பதை உணர மறுக்கின்றனர். நேரடியான செய்தி சேனலைப் பார்க்க ஆர்வமில்லாத இளைஞர்கள், சினிமாவை தீவிரமாக பார்க்கிறார்கள் என்றால், சினிமா எல்லாவற்றையும் விட பலமிக்கது என்றுதானே பொருள்.

கருத்துருவாக்கம் செய்யும் வலிமையான களமான சினிமாவில் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? என்பது ஆய்வுக்குரிய கேள்வியாகும். சினிமாவில் முஸ்லிம்களும் இல்லை; சினிமாவும் முஸ்லிம்களிடம் இல்லை. அப்படியெனில், அமீர் போன்றவர்களெல்லாம் யார் என்ற ஐயம் பலருக்கும் எழும். அமீர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைக் கொண்டு எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது. சினிமாவில் ஒருசில தனிமனிதர்கள் ஆளுமை செலுத்துவதற்கும், ஒரு சமூகமே ஆதிக்கம் செலுத்துவதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அமீர் ஒரு தனிமனிதர்; ஆனால், மணிரத்னம் ஒரு சமூகம். அமீருக்கு பெரிய பொருளாதார வலிமை கிடையாது; முஸ்லிம் பணக்காரர்கள் அவரிடம் முதலீடு செய்வது இல்லை; நல்லா பண்ணுங்க தம்பி, நாங்க இருக்கிறோம் என்று சொல்வதற்கு ஒற்றை நபர் கூட கிடையாது; துபாயிலும், சிங்கப்பூரிலும் சினிமாக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் முஸ்லிம் பெரும்பணக்காரர்கள் கூட முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து விலகியே நிற்கின்றனர்.

இத்தகைய பலவீனமான சமூகப் பின்னணியிலிருந்து இயங்கும் தனிமனிதர்களால் பலமிக்க சினிமா உலகில் எந்தப் பெரிய சாதனையையும் நிகழ்த்த முடியாது. சமூகம் சார்ந்த எந்தப் பதிவையும் அவர்களால் செய்ய முடியாது. காஷ்மீரைப் பற்றி படமெடுக்கப் போகிறேன், ஜிஹாத் பற்றி படமெடுக்கப் போகிறேன் என்றெல்லாம் நெடுங்காலமாக அமீர் கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவரால் 'பருத்திவீரன்'தான் எடுக்க முடிந்ததே தவிர காஷ்மீரைப் படமாக்க இயலவில்லை. காரணம், பருத்திவீரனுக்குத்தான் புரடியூசர் கிடைப்பார்; பைனான்சியர் கிடைப்பார். காஷ்மீர் எனும் பெயரைக் கேட்டவுடனேயே அவர்களெல்லாம் இடத்தைக் காலி செய்து விடுவார்கள். ஆனால், மணிரத்னம் அதே காஷ்மீர் பற்றி ‘ரோஜா’ எனும் படமெடுத்து விட்டார். அவருக்கு எந்தத் தடையும் இல்லை. ஆகச் சிறந்த கலைஞர்களைக் கொண்டு, ஆகச் சிறந்த படங்களை அவரால் எடுக்க முடிகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை, பிரச்சனைக்குரிய தலைப்புகளைக் கொண்டு அவர் மிக இயல்பாக சினிமாக்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

புறக்கணிப்பும், அங்கீகார மறுப்பும் ஒரு கலைஞனை எதிர்மறையான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி விடும். 2002 இல் அமீர் எடுத்த முதல் படமான ‘மெளனம் பேசியதே’ திருமறை வசனத்தோடு திரையில் விரிந்தது. இறுதித் தீர்ப்பு நாளை விவரிக்கும் அருமையான வரிகளுடன் முழுமையான பாடல் ஒன்று அப்படத்தில் இடம்பெற்றது. ஆபாச வரிகளோ, வசனங்களோ, காட்சிகளோ துளியும் இல்லை. இரண்டாவது படத்திலும் கூட அத்தகைய நிலை தொடர்ந்தது. அப்பொதெல்லாம் அவரை அணுகவோ, அவரோடு நெருங்கவோ எந்த முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை.

'பருத்திவீரன்' வெற்றிக்குப் பின் மிகப்பெரும் புகழ் வெளிச்சத்தில் அமீர் அடையாளப்பட்ட பிறகு பல முஸ்லிம்கள் அவரோடு நட்பு வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். சில முஸ்லிம் அமைப்புகளின் அலுவலகங்களுக்குக் கூட அவர் வந்து சென்றார். ஆனால், அவர்களும் தனிப்பட்ட நட்பாக அதைச் சுருக்கிக் கொண்டார்களே தவிர, சினிமாவுடனான ஊடகத் தொடர்பாக அதை விரிவுபடுத்திப் பார்க்கவில்லை. அப்போதும் சினிமாவில் முஸ்லிம்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் வந்து கொண்டேதான் இருந்தன. அவற்றிற்கு அமீரை வைத்து எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதைப் பற்றி எவருமே யோசிக்கவில்லை. முஸ்லிம்கள் குறித்த சரியான பதிவைச் செய்ய அமீருக்கு வழி செய்து கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் ஒரு சினிமாவை எடுத்திருப்பார். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை.

அமீருடன் முஸ்லிம்கள் இணைந்து இயங்கியிருக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஏனெனில், அவருடன் தொடர்பில் இருப்பதை வெளிக்காட்டினாலே எங்கே சினிமாக்காரனுடன் திரிகிறார்கள் என்ற விமர்சனம் வந்துவிடுமோ என்று அஞ்சும் மனநிலையே முஸ்லிம்களிடம் இருந்தது; இருக்கிறது.

இத்தகைய புறக்கணிப்பும் அங்கீகார மறுப்பும்தான் அமீரை குத்தாட்டம் போடும் நிலைக்குத் தள்ளியது. அவர் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்றாலும், அவர் அந்த நிலைக்குப் போகாமல் இருப்பதற்கான எந்தவித புறச்சூழலையும் முஸ்லிம்கள் உருவாக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் விஸ்வரூபம் படம் தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மு.மு.க பொதுச்செயலாளர் அப்துல் சமது வேதனையுடன் பல கருத்துக்களை எடுத்துரைத்தார்; முஸ்லிம்களின் அவல நிலைகளை விவரித்தார்; இந்துத்துவ பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளை பட்டியலிட்டார். இறுதியில், இவை குறித்தெல்லாம் யாருமே திரைப்படம் எடுக்கவில்லையே? என்று வருந்தினார்.

அவரது கவலை தோய்ந்த அந்த கேள்வி முழுக்க முழுக்க நியாயமானதே என்றாலும், அவர் கூறும் அந்த ‘யாருமே’ யார் என்பதுதான் நமது கேள்வியே. நிச்சயமாக, அந்த ‘யாருமே’ எனும் வார்த்தை மணிரத்னத்தையோ, கமல்ஹாசனையோ மனதில் கொண்டு சொல்லப்பட வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர்கள் அவ்வாறெல்லாம் படம் எடுக்கவே மாட்டார்கள் என்பது சமதுக்கு நன்றாகவே தெரியும்.

அப்படியெனில் 'அந்த யாருமே’ என்பது யார்? முஸ்லிம்களின் வேதனைகளை அறிந்தவர்கள் யாரோ, முஸ்லிம்களின் உண்மை நிலையைப் புரிந்தவர்கள் யாரோ, முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளை உணர்ந்தவர்கள் யாரோ, முஸ்லிம்களின் துயரங்களை அனுபவத்தில் கண்டவர்கள் யாரோ, அவர்களால்தான் அப்படியொரு சினிமாவை எடுக்க முடியும்.

அப்படிப்பட்டவர்கள் திரைத்துறையில் சிலர் இருக்கவே செய்கிறார்கள். 'பேராண்மை' எடுத்த ஜனநாதனும், 'நீர்ப்பறவை' எடுத்த சீனு ராமசாமியும், மேலும் பல இயக்குனர்களும் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் குறித்த ஒரு முழு சினிமாவை எடுக்க, ஒரே ஒரு தயாரிப்பாளரைக் கூட நம்மால் அடையாளம் காண முடியவில்லை. முஸ்லிம் சமூகம் சினிமாவைக் கையிலெடுக்க வேண்டும் என்று நாம் சொல்வது இந்தப் பொருளிலேயே.

முஸ்லிம்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சினிமாக்காரர்களை மன்னிப்பு கேட்கச் சொல்லியும், காட்சிகளை நீக்கச் சொல்லியும் அவர்களின் பின்னால் அலையும் முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமா குறித்த இந்த மாற்று முயற்சிகள் குறித்தும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிக்கும் சினிமாக்காரர்களுக்கு எதிராக போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் போராடுபவர்களின் கைகளுக்கு சினிமாவை [ஊடகத்தை] கொண்டுவருவது.

துப்பாக்கியை எதிர்ப்பதிலும், விஸ்வரூபத்தை எச்சரிப்பதிலும் காட்டிய முனைப்பில், துளியளவு கூட 'நீர்ப்பறவை'யை ஆதரிப்பதில் கூட்டமைப்பினர் காட்டவில்லை. தவறாக சித்தரித்த துப்பாக்கி படக்குழுவை பலமுறையும், கமல்ஹாசனை சிலமுறையும் சந்தித்த கூட்டமைப்பினர், சரியாக சித்தரித்த நீர்ப்பறவை இயக்குனரை ஒரே ஒரு முறைகூட சந்திக்கவோ, நன்றி சொல்லவோ முன்வரவில்லை.

இங்கேதான் கூட்டமைப்பின் நோக்கத்தை கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. எதிர்மறையான அனுகுமுறைகளுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் நேர்மறையான அணுகுமுறைகளுக்கு கிடைப்பதில்லை என்பதால்தான், கூட்டமைப்பு நீர்ப்பறவையை கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

முஸ்லிம்கள் பற்றிய தவறான சித்திரம் என்பது இன்று சினிமாவில் மட்டுமல்ல; எல்லா தளங்களிலும் அது தொடரவே செய்கிறது.

அண்மையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சமையல் எரிவாய்வு சிலிண்டர் வெடித்த விபத்தில் சுவர் இடிந்து விழுந்து பஷீர் என்பவர் நிகழ்விடத்திலேயே பலியானார். அவரது பக்கத்து வீட்டினர் இருவரும் பலியாயினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றிய செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட ‘தமிழ் முரசு’ மாலை இதழ் ‘வெடித்தது சிலிண்டரா, வெடிகுண்டா?’ என்று தலைப்பிட்டிருந்தது. விபத்து நடந்தது முஸ்லிம் வீடு என்பதனாலேயே தமிழ் முரசு இப்படி அப்பட்டமான சித்தரிப்பை செய்தது.

விஸ்வரூபம் படத்தைப்போன்றே ஆபத்தானது தமிழ்முரசுவின் இந்தச் சித்தரிப்பு. ஏற்கெனவே பெருநகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகளே கிடைப்பதில்லை. இந்த நிலையில் இதுபோன்ற கொடூரமான சித்தரிப்புகள் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும். ஒவ்வொரு முஸ்லிமையும் நேரடியாக பாதிக்கக்கூடிய இந்தச் செய்தியை எழுதிவிட்டு 'தமிழ்முரசு' சுதந்திரமாகவே உலவுகிறது. கமல் வீட்டுக்கு போகும் வழியில் முஸ்லிம் கூட்டமைப்பினர் 'தமிழ்முரசு' ஆபீசுக்கும் போயிருக்கலாம்; எச்சரிக்கை விடுத்திருக்கலாம்; ஆனால், ஏனோ அவ்வாறு செய்யவில்லை.

கூட்டமைப்பின் செயல்பாடுகளில் மிகப்பெரிய குறைபாடாக நமக்குப்படுவது அதன் முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளே. சினிமா குறித்த பிரச்சனைகளுக்குள் நுழையும் முன், அதில் ஈடுபடுபவர்களுக்கு அத்துறை குறித்த குறந்தபட்ச புரிதலாவது வேண்டும். அப்போதுதான் எதிரியும் மதிக்கும் வகையில் நாம் வாதங்களை எடுத்து வைக்க முடியும்.

ஆனால், சினிமாக்காரர்களை சந்திக்க கிளம்பிய கூட்டமைப்புக் குழுவில் இடம்பெற்ற பலரும் எங்கள் வீட்டில் டி.வி.யே கிடையாது, நாங்கள் சினிமாவே பார்த்ததில்லை என்கிற ரீதியில் பேசக்கூடியவர்கள். சிலர் புகைப்படம் எடுப்பதைக் கூட ஹராம் என்று சொல்லும் கொள்கை உடையவர்கள். ஆனால், அவர்களே மறக்காமல் கமலுடன் போட்டி போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எல்லாம் தனிக்கதை.

பொது ஊடகங்களில் நெடுங்காலமாக பயணப்பட்டிருக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான், ஊடகங்கள் குறித்த பல்வேறு நூல்களை எழுதியுள்ள மு.குலாம் முஹம்மது, மாற்று ஊடகத்தை பல்லாண்டுகளுக்கு முன்பே உருவாக்கிக் காட்டிய கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அழகிய முறையில் எடுத்துரைக்கும் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது போன்ற சிந்தனையாளர்கள் அடங்கிய குழுவை, ஏன் கூட்டமைப்பினர் கமல் போன்றவர்களைச் சந்திக்கச் செல்லும்போது அழைத்துச் செல்வதில்லை என்பது புரியவே இல்லை.

தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் ஜெயலலிதாவே, அறிவார்ந்த தளத்தில் வேலை செய்யவும், 'லாபி'யில் ஈடுபடவும் ஒரு ‘சோ’வை பயன்படுத்துகிறார். அப்படியிருக்க, முஸ்லிம் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் எந்தவொரு சிந்தனையாளரின் பங்களிப்பும் இல்லாமல் இருப்பது, அவ்வமைப்பை அபாயக் கட்டத்துக்கே இட்டுச் செல்லும்.

அமைப்புகளை உருவாக்குவது மிக மிக எளிது; அவற்றை சிறப்பாக வழிநடத்துவதும், சிதையாமல் பாதுகாப்பதும்தான் கடிது. கூட்டமைப்பினர் இதை கவனத்தில் கொள்ளட்டும்.

--ஆளூர் ஷாநவாஸ்

நன்றி: சமநிலைச் சமுதாயம் - பிப்ரவரி 2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக