நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் முந்திரி பருப்பு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இறக்குமதியாகும் கச்சா முந்திரிக் கொட்டைகளின் விலை அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் முந்திரி பருப்பு விலை குறைந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
76,000 டன் ஏற்றுமதி
ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில் ரூ.3,089 கோடி மதிப்பிற்கு சுமார் 76,000 டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,390 கோடிக்கு 1.32 லட்சம் டன் முந்திரி பருப்பு ஏற்றுமதியாகி இருந்தது. ஆக, அளவின் அடிப்படையில் 16 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 17 சதவீதமும் ஏற்றுமதி குறைந்துள்ளது.
முந்திரி பருப்பு நுகர்வு அதிகமாக உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளதாக முன்னணி ஏற்றுமதியாளர் அனு கேஷ்யூஸ் நிறுவனத்தின் அனு எஸ்.பிள்ளை தெரிவித்தார். ஏற்றுமதியாகும் முந்திரி பருப்புக்கு குறைவான விலை கிடைத்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் கச்சா முந்திரியின் விலை அதிகமாக உள்ளது. இதுவும் ஏற்றுமதியாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
நமது ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் 14 லட்சம் டன் கச்சா முந்திரி தேவைப்படுகிறது. இதில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலம் வரை தான்சானியாவில் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்திய நிறுவனங்கள், தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் மகசூல் பருவம் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து கச்சா முந்திரியை வாங்க தொடங்கியுள்ளனர்.
தற்போது ஒரு பவுண்டு (சுமார் அரை கிலோ) முந்திரி பருப்புக்கான ஏற்றுமதி விலை 3.30 முதல் 3.50 டாலர் வரை உள்ளது. இறக்குமதி செலவினத்தை ஈடு செய்ய வேண்டுமானால் 3.60 டாலருக்கு அதிகமான விலை கிடைக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முந்திரி சாகுபடியில் முன்னிலை வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய நாடுகளில் சீசன் தொடங்கி விட்டதால் கச்சா முந்திரி விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 71,610 டன் கச்சா முந்திரி இறக்குமதியாகி உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.
வியட்நாம், பிரேசில்
நம் நாட்டில், கடந்த சில ஆண்டுகளில், கச்சா முந்திரியை இறக்குமதி செய்து பதப்படுத்துவோருக்கும், முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்வோருக்கும் வர்த்தகம் செழிப்பாக இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவில் மலிவு விலையில் முந்திரி பருப்பை விற்பனை செய்வதால் உள்நாட்டில் இத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக