Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

20 ஆண்டுகளாக போராடியவருக்கு பேஸ்புக் மூலம் வெற்றி


மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மணி. இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். இந்தோ - ஸ்ரீலங்கா ஒப்பந்தப்படி, வீட்டுமனை, வேலை வழங்கப்படும் எனக்கூறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு 125 பேருடன் அனுப்பப்பட்டார். மதுரையில் அவர் பணியாற்றிய மில் மூடப்பட்டதால், பணபலன் கிடைக்காமல் வறுமையில் வாடினார். 1983 முதல் வீட்டுமனை கேட்டு, தாசில்தார், கலெக்டர் என விண்ணப்பம் மேல் விண்ணப்பம் அனுப்பினார். பலனில்லை.

ஒரு ஆண்டாக லேடி டோக் கல்லூரியில், குறைந்த சம்பளத்தில் தோட்டக்காரராக பணியாற்றும் மணிக்கு, பேராசிரியை கிறிஸ்டியானா உதவ முன்வந்தார். இவர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு வழங்கினார். எனினும், பலன் இல்லை. பின் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சமீபத்தில் உருவாக்கிய, கலெக்டர் அலுவலக "பேஸ் புக்'கில் தொடர்பு கொண்டு மனு அளிக்க பேராசிரியை கிறிஸ்டியானா உதவினார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அதில் பதிலளித்தார்.

இதுவரை என்னென்ன நடந்துள்ளது என விபரம் கேட்டார். அப்போதுதான் மணிக்கு பூரண நம்பிக்கை பிறந்தது. விபரங்களை தெரிவித்ததும், கலெக்டர் விசாரணை நடத்தி, மணிக்கு ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ""உடனே உத்தரவு வழங்கப்படும்; பெற்றுச் செல்லுங்கள்,'' என்று தெரிவித்தார். இதையடுத்து மணிக்கு கருப்பாயூரணி அருகே 2 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளில் 28க்கும் மேற்பட்ட கலெக்டர்களால் முடியாத பிரச்னைக்கு, அன்சுல்மிஸ்ராவின் புதுமுயற்சியான "பேஸ்புக்' மூலம் தீர்வு கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக