படிப்பதில் ஆர்வத்தை தூண்டும் துறைகளில் ஒன்று புவியியல். நிலம், நீர், காற்று, தட்பவெப்பம், மலை, காடு, கடல், இயற்கை இடர்ப்பாடுகள், நிலத்தின் தன்மை, புவியின் எதிர்காலம், பனிப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இன்றைய தொழிற்புரட்சி யுகத்தில் புவியியல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இத்துறை, இயற்பியல் ரீதியான புவியியல் மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புவியியல் படிப்பு பி.ஏ, பி.எஸ்.சி நிலைகளில் வழங்கப்படுகிறது. புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கு செல்லலாம். ஆசிரியர் பணியிலும் ஈடுபடலாம்.
நகர்மயமாக்கல் படிப்பில் முதுநிலை டிப்ளமோ முடித்தால் பரவலான வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம் நிச்சயம். இப்படிப்புக்கு முதுநிலையில் குறைந்தது 55 மதிப்பெண்கள் வேண்டும். நுழைவு, நேர்முக தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சுற்றுச்சூழலியல் மற்றும் வன மேலாண்மை துறை சார்ந்த நிறுவனங்களும் புவியியல் பட்டதாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன. அரசு, ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் வியாபார ஆலோசனை மய்யங்களில் வேலைகள் காத்திருக்கின்றன.
டில்லி பல்கலையின் புவியியல் பாடத்திட்டத்தில், பேரிடர் மேலாண்மை படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதுநிலை புவியியல் படிப்புடன், பேரிடர் மேலாண்மையில் டிப்ளமோ படித்தால் சிறப்பான வேலைவாய்ப்பு உண்டு. இக்னோ மற்றும் டில்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன. முதுநிலை புவியியல் முடித்த பிறகு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிக்கலாம். இதுதொடர்பான படிப்புகளை டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இப்படிப்புகளை வழங்குகின்றன. இதை முடிப்பவர்களுக்கு, இஸ்ரோ, தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி, தேசிய தகவல்தொடர்பு மய்யம், வானிலை பயன்பாட்டு நிலையம் ஆகியவற்றில் பணி கிடைக்கும். அரசுத்துறைகளை பொருத்தவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், சர்வே ஆப் இந்தியா, விண்வெளி பயன்பாட்டு மையம், நகர மற்றும் கிராம மேம்பாட்டுத் துறைகள், மாநகர மேம்பாட்டு ஆணையம், உள்ளிட்டவற்றில் பணிகள் கிடைக்கும். நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக