நேர்மையும், ஒழுக்கமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குங்கள் என்று ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தக கண்காட்சியில் உரையரங்கம்
36–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியையொட்டி தினமும் இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டுவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க (பபாசி) நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் நேற்று உரையரங்கம் நடந்தது. இதில், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான உ.சகாயம் கலந்துகொண்டு ‘‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
லஞ்சமும், ஊழலும்
இன்று, நேர்மை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடைய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரிய பண்பு ஆகும். நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. ஒரு காலத்தில் சாதாரண ஊசி கூட உற்பத்தி செய்ய இயலாமல் இருந்த நாம் இன்று அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளோம்.எவ்வளவோ தியாகங்களை செய்து சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால், அந்த சுதந்திரத்தின் பயன், சாதாரண மக்களை அடைந்துள்ளதா? என்றால் இல்லை. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்துள்ளன. லஞ்சம், ஏழைகளுக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. இத்தகைய லஞ்சத்தையும், ஊழலையும் அகற்றியாக வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
லஞ்சம் வாங்காதவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த பைத்தியக்காரர்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். நேர்மையாக செயல்படும்போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், ஊழல் அதிகாரிகள் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்கள் நேர்மையை அங்கீகரிக்கிறார்கள். சாதாரண மக்கள்தான் நேர்மையையும், நேர்மையான அரசையும் விரும்புகிறார்கள்.நமது ஆசிரியர்கள் மாணவர்களை என்ஜினீயர்களாக, டாக்டர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, சாப்ட்வேர் என்ஜினீயர்களாக உருவாக்குகிறார்கள். மிகவும் சந்தோஷம். ஆனால், அவை அனைத்தையும் விட மேலாக நேர்மையும், ஒழுக்கமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குங்கள் என்று ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால், மாணவர்களை நேர்மையும், பண்பும் மிக்கவர்களாக ஆற்றல் படைத்த கருவிகள் ஆசிரியர்கள்தான்.இவ்வாறு சகாயம் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக