தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில்மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
கூட்ட முடிவில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 2010ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குள், தமிழக அரசு திடீரென்று தகுதித்தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது.
அரசாணை 169, 170, 175 ஆகியவற்றின்படி, தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு பொருந்தாது என தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசு இந்த அரசாணைகளை அமல்படுத்தாமல் உள்ளது.டிஆர்பி, தகுதித்தேர்வு மூலம் நியமிக்கப்படும் இளம் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது.
2001 முதல் 2007ம் ஆண்டு வரை டிஆர்பி நடத்திய போட்டித் தேர்வு மூலம் ஏராளமான இளம் ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதனால், தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது கண்டனத்துக் குரியது. கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பேரணி நடத்தப்படுகிறது. 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக