குஜராத்தில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக திகழ்ந்து வந்த, படேல் சமூகத்தினரிடையே, தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது. கேசுபாய் துவங்கியுள்ள, புதிய கட்சிக்கு, இந்த சமூகத்தை சேர்ந்த, ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வரும், 13 மற்றும், 17ம் தேதிகளில், இங்கு இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வரும் நிலையில், தேர்தல் களத்தில், பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குஜராத்தில், படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள், ராஜ்கோட் உள்ளிட்ட, ஏழு மாவட்டங்களில், அதிகம் வசிக்கின்றனர்.
மொத்தம் உள்ள, 182 சட்டசபை தொகுதிகளில், 54 தொகுதிகளின், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு, பலம் வாய்ந்த சமூகமாக, படேல் சமூகத்தினர் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சமூகத்தினர், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
கேசுபாய் படேல் :
பா.ஜ.,வின் ஓட்டு வங்கி என்று கூட, இவர்களை கூறலாம். படேல் சமூகத்தில், செல்வாக்கு மிக்க தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான, கேசுபாய் படேல், பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக் கட்சி துவங்கி உள்ளார். நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக, கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார், கேசுபாய் படேல். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், திடீரென, "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என்ற, கட்சியை துவக்கி, நரேந்திர மோடிக்கு, பெரும் சவாலாக விளங்கி வருகிறார்.
படேல் சமூகத்தில், கடவா மற்றும் லெயுவா என, இரு பிரிவு உண்டு. கேசுபாய் படேல், லெயுவா பிரிவைச் சேர்ந்தவர். படேல் சமூகத்தில், லெயுவா பிரிவினர் தான், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். தற்போது, கேசுபாய் படேல் துவங்கியுள்ள, புது கட்சிக்கு, லெயுவா பிரிவைச் சேர்ந்த, பெரும்பாலானோர், ஆதரவு தெரிவித்துள்ளனர். லெயுவா பிரிவில், செல்வாக்கு மிக்க தலைவரான, நரேஷ் படேல் என்பவர், மாநிலத்தின் பல இடங்களில், தொடர்ச்சியாக, தங்கள் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் எல்லாம், கேசுபாய் படேல் துவக்கியுள்ள கட்சிக்கு, இந்த தேர்தலில், ஆதரவு அளிக்க கோரி வருகிறார். இந்த கூட்டங்களில், கேசுபாய் படேலும், தவறாமல் பங்கேற்கிறார். நரேஷ் படேல்,"நம் சமூகத்தை சேர்ந்தவர்கள், 10 ஆண்டுகளாக, வளர்ச்சி பணிகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.
இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், கேசுபாய் படேல் பின், அணி திரள வேண்டும்'என, தங்கள் பிரிவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.எனவே ,பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக