Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மின்சாரம் இல்லாத வீடுகளில் ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்


"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்" என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி"யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.
மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி"யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர். ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை..." என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

"புராஜெக்ட் சிராக்" என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.

கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக