குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு நடந்த வகுப்புக் கலவரத்தைத் தடுக்க முதல்வர் என்ற முறையில் நரேந்திரமோடி தவறிவிட்டார். அப்படிப்பட்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக எப்படி ஏற்பது என்றும் ஐக்கிய ஜனதாதளம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்மைக்காலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரைப் பிரதமர் வேட்பாளர்போல் சித்தரித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.முதல்நாள் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்மைக்காலமாக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் போல பாரதிய ஜனதா கட்சியினர் உருவகப்படுத்தி வருகின்றனர். இதை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா தலைமை அதன் நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும். ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற தலைவராகத் திகழும் ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய ஜனதா தளம் உறுதியுடன் உள்ளது,என்றார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக