இரண்டாவது முழுமை திட்டத்தில், பசுமை பகுதிகளாக குறிப்பிடப்பட்ட இடங்களை தனி தனியாக தொழில் பகுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) துவக்கிஉள்ளது.
சென்னை பெருநகர் பகுதிக்கான, இரண்டாவது முழுமை திட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும், நிலங்களின் பயன்பாடு வரையறுக்கப்பட்டு உள்ளன.
இந்த வரையறையின் அடிப்படையிலேயே, அந்தந்த நிலங்களில் வளர்ச்சி, மேம்பாட்டு பணிகளுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும்.இந்த வகையில், பூந்தமல்லி புறவழிச் சாலை, செங்குன்றம் புறவழி சாலை ஆகியவற்றின் இருபுறமும் பசுமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த பகுதிகளில், சாலையின் இருபுறமும், 15 மீ., தூரம் வரை உள்ள நிலங்களில், எந்தவித கட்டுமான திட்டங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.
வாயிற் தூண்கள், பாதுகாவலர் அறைகள் மட்டும் கட்ட அனுமதிக்கப்படும்.
இதன் மூலம், இந்த சாலையின் இருபுறத்திலும் சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் பசுமை தன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்.
ஆனால், இந்த பகுதிகளை, தொழிற்சாலை பகுதியாக ஒட்டு மொத்தமாக மாற்றி அறிவிக்கும் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடந்தாண்டு, டிசம்பரில் துவக்கினர்.
பசுமை பகுதிகளை தொழிற்சாலை பகுதிகளாக மாற்றுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நகரமைப்பு வல்லுனர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால், பசுமை பகுதிகளை ஒட்டுமொத்தமாக தொழில் பகுதிகளாக மாற்றும் நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கைவிட்டனர்.
இந்த நிலையில், தனி தனியாக பசுமை பகுதிகளை தொழில் பகுதியாக மாற்றும் நடவடிக்கை மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அம்பத்தூர் தாலுகா நூம்பல் கிராமத்தில், இரண்டாவது முழுமை திட்டத்தில் பசுமை பகுதியாக வரையறுக்கப்பட்ட பழைய சர்வே எண், 14/18, 15/14 ஆகியவற்றில் உள்ள நிலத்தை தொழில் பகுதியாக மாற்ற வேண்டும் என, தனியார் ஒருவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து, சமீபத்தில் நடந்த குழும கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிலத்தின் பயன்பாட்டை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நில பயன்பாடு மாற்றம் கோரி வரும் விண்ணப்பங்கள் போன்று, இதுவும் கருதப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக