மதுரை மல்லிக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் மவுசு அதிகரித்து வருகிறது.மல்லிகை பூ வகைகளில், அதிக வாசனை கொண்டது மதுரை மல்லி. இது, மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், 1,250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மல்லிக்கான தேவை,ஆண்டுக்கு, 10,500 டன்னாக உள்ளது.ஆனால், இதன் உற்பத்தி,9,500 டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், மதுரை மல்லி அதிக அளவில் விளைகிறது. அப்போது, கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழை மற்றும் குளிர் காலத்தில், கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டில்லி மும்பை ஆகிய நகரங்களில், மதுரை மல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அயல்நாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.விலையில் ஏற்ற, இறக்கம், போதிய கிடங்கு வசதியின்மை, இடைத்தரகர்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளால், மதுரை மல்லி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, மதுரை மல்லி விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக