Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: 900 பேர் காத்திருப்பு


பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த, 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பணி காலத்தில் இறந்தால், அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். இவர்களுக்கு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 1997ம் ஆண்டு வரை, இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, வேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவ்வரிசையில், இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் பேர், காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில், 541 பேருக்கு, தற்போது பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன், புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் பணி நியமன உத்தரவு வழங்குவதாக இருந்தது; ஆனால்,வழங்கப்படவில்லை.

பள்ளி கல்வித்துறையில், காலியாகவுள்ள, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, பணியிடங்களுக்கு, கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"பணி ஒதுக்கீடு செய்த எங்களுக்கும், உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்" என, வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது:

கருணை அடிப்படையில், அரசுப்பணி பெற,10 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் காத்திருக்கின்றனர். தேர்வு செய்யப்பட்டோர், பணி நியமன உத்தரவு பெறாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பன், ஆணையாளரிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக