Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 9 பிப்ரவரி, 2013

கூடுதல் பள்ளி கட்டணத்தை திருப்பி செலுத்தும் உத்தரவு செல்லும்


 "மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை, திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில், லியோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 2,300, மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கான, கல்விக் கட்டணத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்தது.

குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்ததாக, இப்பள்ளிக்கு எதிராக, பெற்றோரிடம் இருந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, பள்ளியின் முதல்வருக்கு, திருவள்ளூரில் உள்ள, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் உத்தரவிட்டார்.

கடந்த 2011 ஆகஸ்ட்டில் நடந்த விசாரணையில், பள்ளி தரப்பில் ஆஜராகி, விளக்கம் அளிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, ஜனவரியில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இணை ஆய்வாளர், பள்ளிக்கு நேரில் சென்றார். ஆவணங்களை சரிபார்த்தார்; மாணவர்களிடமும் விசாரித்தார்.

"கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது" என, நீதிபதி குழுவிடம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர், அறிக்கை அளித்தார். அதைத் தொடர்ந்து, குழு சார்பில், பள்ளிக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீதிபதி குழு முன், பள்ளி தரப்பில் ஆஜராகி, விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த ஆண்டு, மார்ச் மாதம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில், "கூடுதல் கல்விக் கட்டணத்தை, பள்ளி வசூலித்துள்ளது. கூடுதல் கட்டணத்தை, பள்ளியிடம் இருந்து வசூலித்து, சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு திருப்பி செலுத்த வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், லியோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தரப்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. கல்வித்துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜரானார்.

பள்ளிக்கு, போதிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த உத்தரவின்படி பார்த்தால், இப்பள்ளி தரப்பில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனரகம் தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தியடைந்த பின், கூடுதல் கட்டணத்தை திருப்பி செலுத்தும்படி, கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி தரப்பில், 79.47 லட்சம் ரூபாய், திருப்பிச் செலுத்தப்பட்டதாக, கூறப்பட்டுள்ளது; ஆனால், பதில் மனுவில், 29.36 லட்சம் ரூபாய், திருப்பி செலுத்தப்பட்டதாக, திருவள்ளூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, பெற்றோர் அளித்த புகார், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அளித்த அறிக்கை அடிப்படையில், கூடுதல் கட்டணத்தை திருப்பிச் செலுத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், இயற்கை நீதி மீறப்படவில்லை. இந்த உத்தரவில் குறுக்கிட தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக