Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 மே, 2013

வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி: தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை


வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி குறித்து, தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை' என, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் சுதீப் ஜெயின் பேசினார்.

மரபு சாரா எரிசக்தி குறித்த, சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா), ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

இந்தாண்டுக்கான, "ரினர்ஜி-2013' என்ற மூன்று நாள் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நேற்று துவங்கியது.கருத்தரங்கில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் எதிர்கொள்ளும் சவால்கள், நவீன தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில், பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தும் முறை மற்றும் சவால்கள், வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்பு நிறுவுதல் ஆகியவை குறித்தும், பயிலரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் "டெடா' தலைவர் சுதீப் ஜெயின் பேசியதாவது:வீடுகளில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன.இருப்பினும், நகர் மற்றும் கிராமப்புறங்களில், வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வது குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.சூரிய சக்தி மின் உற்பத்தியில், குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. இங்கு, அதிகளவு வீடுகளில், "சோலார்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இதை போல, தமிழகத்திலும், மூன்று ஆண்டுகளில், வீடுகளில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஈடுபடும், 200 நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். கேரளா, ஆந்திரா, குஜராத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும், சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக