Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 11 டிசம்பர், 2012

அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பராமரிப்பின்றி அழியும் மூலிகை தோட்டம்


நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள மூலிகை தோட்டம் போதிய பராமரிப்பு இல்லாததால் அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன. நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காசநோய், ஆஸ்துமா, மூலம், தொழுநோய், மஞ்சள் காமாலை, மகளிர் மற்றும் குழந்தைகள் நோய், தோல் நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக 250 பேரும், வெளிநோயாளிகளாக தினமும் சுமார் ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதவிர ஆஸ்பத்திரியில் ஆய்வு கூடம், மருந்து தயாரிக்கும் மையம், எக்ஸ்ரே, ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சித்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்த மருத்துவக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை சித்த மருத்துவ பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு மூலிகை செடிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வசதியாக மருத்துவக்கல்லூரி தேர்வு அறையின் பின் பக்கத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் சர்ப்பகந்தா, 4 வகை நொச்சி, மாவிலிங்கம், நிலவேம்பு, மலைவேம்பு, கற்றாலை, துளசி உட்பட 300க்கும் அதிகமான மூலிகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மூலிகை தோட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைகளை வனத்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள், வேளாண் துறையினர் உட்பட பலர் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையே நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வழியில்லாததால் மூலிகை செடிகள் கருகி வருகின்றன. சில வகை மூலிகை செடிகள் பூச்சி தாக்குதலுக்குள்ளாகி மெல்ல மெல்ல அழிந்து வருவதோடு, தோட்டம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் மூலிகை தோட்டத்திற்குள் மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்காக பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் மூலிகை தோட்டம் எந்த பயன்பாடும் இன்றி காட்சி பொருளாக மாறியுள்ளது. எனவே சித்த மருத்துவதுறை இயக்குநரகமும், மாவட்ட நிர்வாகமும் நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் அழிந்து வரக்கூடிய அரிய வகை மூலிகை செடிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி மாணவர்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை சித்த மருத்துக்கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமனம் எப்போது?நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பொறுப்பு முதல்வர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒன்று அல்லது 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பணியாற்ற அனுமதி வழங்கப்படுதால், அவர்களால் பிரச்னையை சுமூகமாக தீர்க்கவோ அல்லது உறுதியான முடிவுகளை எடுக்கவோ முடியாத நிலை உள்ளது. இதனால் நேரடியாக நோயாளிகளும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சித்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடு சிறப்பாக அமைய நிரந்தமாக முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக