கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி, மின் தடையால் ரோஜா விவசாயிகள், மலர் சாகுபடியை கைவிட்டு வருகின்றனர். இதனால், வரும் புத்தாண்டு மற்றும் காதலர் தினத்திற்காக, வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி, தளி, பேளகொண்டப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஆண்டுதோறும், 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள், திறந்த வெளியில் பட்டன் ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர்.
பசுமை குடில் :இத்துடன், பசுமை குடில் (கிரீன்ஹவுஸ்) முறையில், ஏற்றுமதிக்கான உயர் ரக ரோஜா சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.பசுமை குடில் முறையில், ஒரு ஏக்கர் ரோஜா சாகுபடிக்கு, 30 லட்ச ரூபாய் செலவாகிறது. அரசு மானியம், 13 லட்ச ரூபாய் போக, மீதி வங்கிக் கடனாக பெறப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.ரோஜா சாகுபடி, ஆழ்துளை கிணறுகளை நம்பியே, சொட்டு நீர் பாசனத்தின் வாயிலாக நடக்கிறது. உரங்கள் மற்றும் மருந்துகளை நேரடியாக செடிகளுக்கு தெளிக்காமல் தண்ணீரில் கரைத்து, சொட்டு நீர் குழாய்கள் வழியாக வழங்குவர்.தற்போது, ஓசூர் தாலுகாவில் தினம், 18 மணி நேரம் மின்தடையாலும், ஆழ் துளை கிணறுகள் வறண்டு காணப்படுவதாலும், ரோஜா செடிகளுக்கு உரிய நேரத்தில் நீர் பாசனம், மருந்துகளை வழங்க முடியாத நிலை உள்ளது.
வங்கி கடன்:இதனால், விரக்தியடைந்த விவசாயிகள், மூன்று மாதமாக ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை. வங்கி கடனை அடைக்க வழி தெரியாத விவசாயிகள், பசுமை குடில்களை அகற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
பேரிகை குடிசெட்லுவை சேர்ந்த ரோஜா விவசாயி சிவா கூறியதாவது:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இலவச திட்டங்களால் பூக்களை பறிக்க தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. வறட்சியை விட, மின்தடை பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால், செடிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் மற்றும் மருந்து தெளிக்க முடியவில்லை.நோய் தாக்குதல்:பராமரிப்பு, நீர் பாசனம் இல்லாததால் தரமான பூக்கள் கிடைப்பதில்லை.
மொட்டுகள் விரியாமல் கீழே உதிர்ந்து விடுகின்றன. மருந்து அடிக்காமல் நோய் தாக்குதலும் அதிகரித்து உள்ளது.ஜெனரேட்டர் வைத்து ரோஜா சாகுபடி செய்தால், உற்பத்தி செலவினத்திற்கு ஏற்ற விலை கிடைக்காத நிலை உள்ளது. சரி, இந்தாண்டை விட்டு விட்டு, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என, செடிகளை பராமரிக்க நினைத்தால், வங்கிகள் கடனை கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்கின்றன.இதனால், 6.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசுமை குடில்களை, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்று கடனை அடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தலைமறைவாகும் ரோஜா விவசாயிகள்:பேரிகை, பாகலூர் பகுதியில், 40 பசுமை குடில்களில், சாகுபடி செய்யாமல் விவசாயிகள் காலியாக விட்டுள்ளனர். பசுமை குடில்களை பொறுத்தவரை, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால், அதை மாற்ற, 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். அப்படி செலவு செய்ய தற்போது விவசாயிகளிடம் பணம் இல்லை. வறட்சி நிலவுகிறது.
மின்தடை பிரச்னையும் இப்போதைக்கு தீர்வதாக இல்லை.அதனால், இழப்பை சமாளிக்க, பசுமை குடில்களை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். மேலும் பலர், வங்கி கடன், கந்து வட்டி கடனுக்கு பயந்து தலைமறைவாகி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக