Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 27 நவம்பர், 2012

தொழில் முனைவோருக்கான புதிய திட்டம் :25 சதவீதம் அரசு மானியத்துடன் அமல்


தமிழகத்தில் 25 அரசு மானியத்துடன் தொழில் முனைவோருக்கு வரும் 1ம் தேதி முதல் புதிய திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

 வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் செயலாக்கம் பெற உள்ள இத்திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள், சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் உதவி வழங்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு: பொது பிரிவினர் 21-35 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை தகுதியானவர்கள். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பிரிவில் அடங்குவர்.

தகுதிகள் :
பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி தகுதியானவையாகும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு: 5 லட்சம் முதல் 100 லட்சமாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும்.

அரசு மானியம்:
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கும். கடன் உதவி பெற பாங்கில் இருந்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒரு மாதம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும். ஏற்கனவே அரசு துறைகள் மூலம் கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்களாக அமையும் சூழ்நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் தனித்தனியாக திட்டத்தில் கடன் பெற தகுதிகள் இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட குழுவில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரும் 1ம் தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (டெலிபோன் - 0462 - 2572384) நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்,என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக