Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 20 அக்டோபர், 2012

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாதம் தோறும் 8,170 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு பிரச்னையால் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சுமார் 3 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்படும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத தவணை தொகை 150 ரூபாய் பிடித்தம் செய்ய்பபடுகிறது. இந்த தொகையை குறைக்க வேண்டும். கல்வித் துறை அலுவலகங்களில் சுமார் 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 18ம் தேதிக்குள் இக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து நவம்பர் மாதம் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து பகுதிகளிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கைகளுக்காக பிற ஆசிரிய சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக