செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய் இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.
செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.
2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?
பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.
சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .
இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும் (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.
சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .
கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.
வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.
இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.
சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக