Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

தி.மு.க.தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்: கருணாநிதி

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.


கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதா?

பதில்:- கூட்டணி பற்றியும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதையும் மனதில் வைத்து செயல் படுவோம்.

கேள்வி:- இந்த கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்:- அவர் மாவட்ட செயலாளர் அல்ல.

கேள்வி:- உங்களுக்கு பின் மு.க.ஸ்டாலின் என்று நீங்கள் பேசியதற்கு தி.மு.க. மடம் அல்ல என்று மு.க.அழகிரி கூறி இருக்கிறாரேப

பதில்:- பா.ம.க.வில் இருந்து 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் சேர்ந்த போது அவர்களை வரவேற்று நான் பேசிய போது சமுதாயத்தை பற்றித்தான் பேசினேன். அந்த சமுதாய பணியில் நானும் என்னுடைய குடும்பத்தாரும் என் அளவுக்கு ஈடுபட்டதை கோடிட்டு காட்டினேன். அந்த சமுதாய பணியை எனக்கு பிறகு என்னை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முற்படுவார் என்று குறிப்பிட்டேன்.

தி.மு.க.வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று நான் குறிப்பிட்டதாக பத்திரிகை படிக்காத சில ஏடுகள் விஷமத்தனமாக செய்தி வெளியிட்டன. அந்த விஷமத்தை நம்பிக்கொண்டு யாராவது எதிர் கருத்து தெரிவித்திருந்தால் அது அவர்களுடைய புரியாமையைத்தான் காட்டும்.

கேள்வி:- தி.மு.க. ஒரு முதன்மையான கட்சி. அந்த கட்சியில் உங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் என்று கூறுவதில் தவறு இல்லையா?

பதில்:- நான் பேசும் போது தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பேசியதாக வெளியிட்டுள்ளார்கள். தி.மு.க. என்ற அரசியல் இயக்கத்துக்கு எனக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வருவார் என்று நான் பேசியதாக உங்களால் எடுத்துக்காட்ட முடியுமா? அப்படியே நான் சொல்லி இருந்தாலும் அதில் என்ன தவறு.

மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் வரக் கூடாது என்று இப்போதே தடுப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அது கடுப்பை ஏற்படுத்தும். தி.மு.க. அரசியல், சமுதாயம் இரண்டையும் இணைத்து செயல்படும் கட்சி. அன்று பா.ம.க.வில் இருந்து 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் வந்து இணைந்த நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தை பற்றி நான் பேசும் போது என்னுடைய சமுதாய முன்னேற்ற சமத்துவ உணர்வுகளுக்கு எனக்கு பிறகும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபடுவார் என்று குறிப்பிட்டேன்.

தி.மு.க. தலைவராக எனக்கு பிறகு அவர் வருவார் என்று அன்று நான் கூறவில்லை. தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். கட்சி தேர்தலில் குறிப்பாக தலைமை கழக தேர்தலில் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ ஒருவர் நிற்க வேண்டும் என்றால் அதை ஒருவர் முன்மொழிந்து பொதுக்குழுவில் தான் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வருமேயானால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன் மொழிவேன்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் அலை அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.

பதில்:- கழக சட்ட திட்டத்தை பின்பற்ற வேண்டும்.

கேள்வி:- அழகிரியும் தலைவர் பதவியை விரும்புகிறார். ஸ்டாலினும் தலைவர் பதவியை விரும்புகிறார். இதில் ஸ்டாலின் பெயரை முன்னிலைப்படுத்துவது தவறு இல்லையா?

பதில்:- யார் யார் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் பொதுக் குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் முறைப்படி நடைபெறும்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் செல்லாக்காசும், செல்லரித்த காசும் கூட்டணி வைக்கப் போவதாக பேசி இருக்கிறார்களே?

பதில்:- நான் கள்ளக்காசை பற்றி பேச விரும்பவில்லை.

கேள்வி:- தே.மு.தி.க. வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:- தே.மு.தி.க.வில் தி.மு.க. என்று இருக்கிறதே.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக