சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை.
ஆனால், பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறிது நேரம் பேசினார். அவர் தனது பேச்சை, கழகத்தின் நிரந்தர தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தொடங்கினார். அவர் மேலும் கூறியதாவது:–
வீரபாண்டி ஆறுமுகம் கோபம்
பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்காக சில நேரங்களில் பொறுத்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காகவோ உறவு கொள்வதில்லை. ஒரு முறை கலைஞரும், நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் மிகவும் கோபமாக உள்ளே வந்தார்.என்ன நடக்கிறது இங்கே? என்று தொடங்கிய அவர், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். மேலே தயாளு அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவு துணிச்சலையும் யார் கொடுத்தது?. மத்தியில் ஆட்சி என்றால் நாமும் சேர்ந்துதானே ஆட்சி. இனியும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?. வெளியே வந்துவிடுவோம். தேர்தலையும் தனியாக சந்திப்போம். இந்த அவமானத்தை தாங்கியது போதும் என்று அவர் கண்கலங்கி வருத்தப்பட்டு பேசினார்.
சில்லறை வணிகம்
சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீடு என்பது நாம் எதிர்க்கும் ஒரு கொள்கை என்றாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்ற நோக்கத்தில்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மனம் வருந்தி ஓட்டு போட்டோமே தவிர சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக அல்ல. இப்படி பல சம்பவங்களில் நமக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தாலும், ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாதே என்பதால் ஆதரவு தெரிவித்து வந்தோம்.
இலங்கை தமிழர் பிரச்சினை
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பிரச்சினை என்பது நமது உயிரோடு கலந்தது. 1956–ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. குரல் கொடுத்து வந்தது. நமது போராட்டத்தின் உச்சக்கட்டம் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுதான். இலங்கை தமிழர் பிரச்சினைக்காகத்தான் கலைஞரும், நானும், மற்றவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. இருமுறை ஆட்சியையே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இழந்து இருக்கிறோம்.இப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வெளியே வந்தோமே தவிர, இந்த ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஒருபோதும் தி.மு.க. ஈடுபடாது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு மதவெறி கொண்ட ஆட்சி வருவதற்கு தி.மு.க. ஒருபோதும் துணையாக இருக்காது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் அல்ல.
மனம் உடைந்து..
இங்கே கலைஞர் உடலும், மனமும் உடைந்து அமர்ந்திருக்கிறார். உள்ளத்தால் நொந்து உட்கார்ந்து இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை. எனக்கும் இருமலும், சளியும் இருக்கிறது. ஆனால் உங்களை எல்லாம் பார்த்த உடன் எல்லாவற்றையும் மறந்து பேசுகிறேன். நான் கலைஞரிடம் கூறுவது, அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. மாமன் என்னடா.. மச்சான் என்னடா.. எவனாக இருந்தாலும் ஒதுக்கிவிடுங்கள். உங்களோடு லட்சோப லட்ச கழக தொண்டர்கள் இருக்கிறார்கள்.இவ்வாறு க.அன்பழகன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக