நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு, மோதல் நடந்து வருகிறது. மோதலில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதனால் மாணவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு கல்லூரி மற்றும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கல்லூரி கண்ணாடி, ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினர். மேலும் லேப் மற்றும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை உடைத்தனர். இது தவிர கல்லூரிக்கு சொந்தமான 4 கார்களை சேதப்படுத்தினர். இதனால் கல்லூரி போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த கலவரத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கல்லூரி பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக