Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 நவம்பர், 2012

தமிழகத்தில் அறிமுகமாகிறது செய்முறைத்தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் ......


இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.

தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.

முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக