கடையநல்லூர் பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கன்குனியா, டெங்குகாய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் தற்போது இப்பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைகால், ஊர்மேலழகியான், அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் பாதித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதித்தவர்கள் உடல்வலி, கை, கால் மூட்டு வலி போன்றவைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை ஒரு சில தினங்கள் மட்டும் பெய்துவிட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் தான் காய்ச்சலுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொதுமக்களின் தூக்கத்தினை கெடுக்கும் வகையில் நடமாடும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேகமாக பரவி வரும் காய்ச்சலால் கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பெரும் அவதியும், பீதியும் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக