தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், கோரிக்கைகள், நல திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, "கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலவாழ்வு சங்கம்' ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார்; பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் முன்னிலை வகித்தார்."மாற்றுத்திறனாளிகள் சமூக நல பாதுகாப்பு திட்டங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நலவாரியம் செயல்படாமல் உள்ளது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் விதத்தில், நலவாரியத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநில கொள்கையை அரசு வெளியிட வேண்டும் ' என, வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இடஒதுக்கீடு சரியாக அனுமதிக்கப்படாததால், படித்து, பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அரசு முறையான செயல் திட்டங்கள் வகுத்து வேலைவாய்ப்பு பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் மத்திய அரசு பின்பற்றும் விதிமுறைகளை தமிழக அரசும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் துறையில் ஐந்து சதவீத வேலைவாய்ப்பு கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்திட்டத்தில் பயனாளிகளாக காத்திருக்கும் 3,365 பேருக்கு இத்திட்டத்தில் பயன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் வருமான உச்சவரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அளிக்க வேண்டும்.
சுயதொழில் செய்ய கடனுதவி பெறுவதற்கு அரசு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கியும் கூட்டுறவு வங்கிகள் எளிதான நடைமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் குறைந்த வட்டியில் கடன்பெற முடியாத நிலை உள்ளது. வங்கிகள் எளிய முறையில் கடனுதவி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மானியத்தில் அளிக்கப்படும் கடன் திட்டங்களுக்கு எவ்வித பிணையமின்றி கடன் கிடைக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.வருவாய்த்துறை மூலம் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் பெறுவதற்கு வருமான உச்சவரம்பை விலக்கி, ஊனத்தின் தன்மையை மட்டும் வைத்து ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான திட்டங்களை முறையாக நிறைவேற்ற, மாவட்ட கலெக்டர் தலைமையில், மாற்றுத்திறனாகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாநில பொரு ளாளர் சந்திரகுமார், கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் கன்னியப்பன், செயலாளர் ஷேக் பரீதுல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக