Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 13 பிப்ரவரி, 2013

செங்கோட்டை- சென்னைக்கு கூடுதல் ரயில், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா...?


மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ரயில்வே பட்ஜெட்டும் முக்கியமானதாகும். இந்த ரயில்வே பட்ஜெட் கூட்டத்தினை அனைத்துதரப்பு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் இருந்து, சென்னைக்கு தினமும் இரவு 7 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், செங்கோட்டை- மதுரைக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை பாசஞ்சர் ரயில்களும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு, தினமும் 3 முறை ஒரே ஒரு பாசஞ்சர் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் எப்பொழுதுமே மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இடைப்பகுதியில் உள்ள சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி பகுதிகளை சேர்ந்த ரயில் பயணிகள், வியாபாரிகள், வர்த்தகர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை- செங்கோட்டை வரை இரட்டை வழி ரயில்பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்றும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட்டால் இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவதோடு மட்டுமல்லாமல் தென்னக ரயில்வேக்கு அதிகளவு வருமானமும் கிடைக்கும்.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் செல்லும் ரயிலில் செல்ல டிக்கட் எடுப்பதற்கே ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயிலில் எப்போதுமே கூட்டம் நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் வழியோர பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வருமானத்தை கணக்கில் கொண்டு ரயில்வே துறை நிர்வாகம் சார்பில் கூடுதலாக பகல் நேரத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளான செங்கோட்டை- கோவை பாசஞ்சர் ரயில், மதுரை- செங்கோட்டை இருவழிப்பாதை மின்சார ரயில், செங்கோட்டை - நெல்லை கூடுதலாக ஒரு ரயிலும், செங்கோட்டை சென்னை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டுமென்ற பல ஆண்டு கோரிக்கையினை வரும் 26ம் தேதி நடக்கும் ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டத்தை சேர்ந்த எம்பி.,க்கள் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக., அமைச்சர்கள் இந்த கோரிக்கையினை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென ரயில்வே பயணிகள் மற்றும் வர்த்தகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக