Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 19 ஜூலை, 2013

அரசு மருத்துவமனைக்கு வெளியே "வீசப்படும்" நோயாளிகள் பஸ் ஸ்டாப், ரோட்டில் கிடக்கும் அவலம்

மதுரை அரசு மருத்துவமனை வார்டுகளில் கவனிப்பாரற்று கிடப்பவர்களை, ரோட்டில் வீசும் கொடுமை தொடர்கிறது. இங்கு சிகிச்சைக்காக வயதானவர்களை அழைத்து வருபவர்கள், அப்படியே விட்டுச் செல்கின்றனர். ஆதரவற்ற முதியவர்களை பராமரிப்பது கடினம் என்பதால், இரவு நேரங்களில் அவர்களை வார்டிலிருந்து ஊழியர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றி, பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றனர். அல்லது, வேறு ஏதாவது வார்டுக்கு அருகில் கொண்டு வந்து படுக்க வைக்கின்றனர். அந்த நோயாளி இறந்தால் கூட, "ஆதரவற்றோர்' என்ற பெயரில் தான் மார்ச்சுவரியில் உடல் வைக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதற்கான ஆதாரங்களை கூட தருவதில்லை.

மூன்று நாட்களுக்கு முன், ஈரோடு கரந்தபாளையம் வீரா,45 என்பவரை வார்டிலிருந்து வெளியேற்றினர். நெஞ்சுக்கூடு வெளியே தெரியும் வகையில், காசநோயாளி போலிருக்கும் அவர், மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாக்கடையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வீரா கிடந்தார். சோறு, தண்ணீர் இன்றி உதடுகள் உலர்ந்த நிலையில், தண்ணீருக்காக "தவித்துக்' கொண்டிருந்தார். செஞ்சுருள் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்தபின், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இதேபோல, சித்த மருத்துவ வார்டு அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 60 வயது மூதாட்டி மயங்கி கிடந்தார். இப்படி மருத்துவமனையைச் சுற்றி வயதானவர்கள் ஆங்காங்கே முடங்கி கிடப்பது, பரிதாபமாக இருக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தனியிடம் ஒதுக்கி, செஞ்சுருள் சங்கத்தின் மூலம் பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக