Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 மார்ச், 2013

தென்னை தோப்புகள் "பிளாட்டுகளாக" மாறும் பரிதாப நிலை


கொட்டாம்பட்டியில், வறட்சி, மின் தட்டுப்பாடு, உற்பத்திற்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால், தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு "பிளாட்டு'களாக மாறி வருகின்றன. இதனால், தென்னை விவசாயம் மெல்ல மெல்ல அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் 8,500 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. வறட்சி, மின்தட்டுப்பாட்டால், தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், விளையும் காய்கள் நிறம் மாறி சிறுத்துக் காணப்படுகின்றன.

இதை வியாபாரிகள் வாங்க விரும்புவதில்லை. அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், நன்றாக விளைந்த காய்களை, வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பாடுபட்டு உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்காததால் சிலர் தங்களது தோப்புகளை அழித்து பிளாட்டுகளாக மாற்றி, விற்றுவருகின்றனர்.

கவிபிரகாஷ்: ஏழு ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். முன்பு 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய்கள் பறிப்போம். தற்போது, மின் தட்டுப்பாட்டால் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாததால், காய்கள் பறிக்க 60 நாட்களுக்கு மேலாகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான காய்கள் நிறம் மாறி சிறுத்துக் காணப்படுவதால், அவற்றை வியாபாரிகள் வாங்குவதில்லை. முன்பு ஒரு ஏக்கருக்கு ரூ.5000 லாபம் கிடைத்த நிலையில் தற்போது ரூ.2000 கிடைப்பதே அரிது.

திருஞானசம்பந்தம்: பெரும்பாலான தென்னை விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிவிடுகின்றனர். அதனால் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு காய்களை கொடுக்கவேண்டிய நிலை. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத விரக்தியில் தோப்புகளை அழித்து பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இப்பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்தால் மட்டுமே, தென்னந்தோப்புகள் பிளாட்டுகளாக மாறுவதைத் தடுக்கமுடியும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக