சிங்கம்புணரி வட்டாரத்தில் பிளஸ் 2,முடிக்கும் மாணவர்கள், கல்லூரி வசதியின்றி உயர்கல்வி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு ஆண், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர்,கிருங்காக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிரான்மலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.
இவை மட்டுமின்றி, உலகம்பட்டி, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, எஸ்.புதூரில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும்,கிராமப்புற பள்ளிகளில் பிளஸ் 2, முடித்து ஆயிரத்து 500 மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
இப்பகுதியில் அரசு, தனியார் கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் இல்லை. ஒரு தனியார் பாலிடெக்னிக், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மட்டும் உண்டு.
வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெற வெளியூர் அனுப்புகின்றனர். ஏழை மாணவர்கள் 25 கி.மீ.,தூரத்தில் உள்ள திருப்புத்தூர், 35 கி.மீ.,தூரத்திலுள்ள மேலைச்சிவபுரி கல்லூரிக்கு தினமும் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.
மாணவிகள், மேலூர், நத்தத்திலுள்ள கல்லூரிக்கு பஸ்சில் சென்று உயர் கல்வி பெறும் கட்டாயம் உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது. இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற சிங்கம்புணரியில் அரசு, தனியார் கல்லூரிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக