Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 பிப்ரவரி, 2013

நெல்லை கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு


நெல்லை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் பைல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், அதன் கீழ் 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர், 2 தரம் உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், 4 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் மாற்றுப்பணி என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பாளை., நகர், மானூர், நான்குநேரி, சேரன்மகாதேவி, மேல நீலிதநல்லூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கான பைல்கள் தேக்கம் அடைந்துள்ளன.இதுதவிர மாவட்டக்கல்வி அலுவலகங்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் இளநிலை உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையுள்ளது.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், இதர உதவித்தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மாற்றுப்பணி மேற்கொண்டு வரும் ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20, 21 தேதிகளில்வேலை நிறுத்தம்:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை, நெல்லை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுடலைமணி, பொருளாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 20, 21 தேதிகளில் நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக